பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
ஆர்.கே.பேட்டை: பயன்பாட்டில் இல்லாத குழவிக்கல்லை ஊரை விட்டு வெளியேற்றினால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் நிலவுகிறது. கடுமையான வறட்சியால் தண்ணீர் பஞ்சத்தை போக்க, மழை வேண்டி, ஆர்.கே.பேட்டை பகுதியில் கிராமங்களில் பயன்பாட்டில் இல்லாத அம்மிக்கல், குழவிக்கல் போன்றவை ஊருக்கு வெளியே கொட்டப்பட்டு வருகின்றன.திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏரி, கிணறுகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டம், 200 அடிக்கும் கீழே சென்று விட்டது.உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிக ஆழத்தில் உள்ள பாறைகளை குடைந்து எடுக்கப்படும் கடின நீர், குடிப்பதற்கு லாயக்கற்றதாக உள்ளது.இதனால், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை, கிராம மக்கள் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கின்றனர். 25 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர், 10 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.குடிநீரின் நிலையே மோசமாக உள்ள நிலையில், விவசாயத்தின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் பலரும் நிலத்தை மனைப் பிரிவுகளாக மாற்றி, விற்பனை செய்து வருகின்றனர்.பாரம்பரியமாக விவசாயம் செய்யும் விவசாயிகள், கோடையில் நிலவும் கடும் வறட்சியை போக்க, மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரம், வீடுகளில் பயன்பாட்டில் இல்லாத அம்மிக்கல், குழவிக்கல் போன்றவற்றை ஊரை விட்டு அப்புறப்படுத்தினால், மழை பொழியும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது.இதன் அடிப்படையில், திருத்தணி-ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் குமரகுப்பம் அருகே, குழவிக்கற்கள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் கூறுகையில், ""காலம் காலமாக கிராமங்களில் உள்ள நம்பிக்கையின் பேரில், இந்த கற்கள் மாட்டு வண்டியில் கொண்டு வந்து கொட்டப்பட்டன என்றார்.