பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
திருப்பூர்: திருப்பூர் எல்.ஐ.சி., காலனி, செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.திருப்பூர் திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனியில் உள்ள செல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி காலை, யாகசாலை மூகூர்த்த கால் விழாவுடன் துவங்கியது. கடந்த 13ல் முளைப்பாலிகை இடுதலை தொடர்ந்து, 17ம் தேதி காலை பவானி கூடுதுறைக்கு தீர்த்தம் எடுக்க புறப்படுதல், காலேஜ் ரோட்டில் விநாயகர் கோவிலில் இருந்து யானை, குதிரை, மேளதாளங்கள் முழங்க, தீர்த்தக்குடம் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், கோபுர கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை 4.30 மணிக்கு நான்காம் கால வேள்வியுடன் விழா துவங்கியது. திருமேனிக்கு சக்தி அளித்தல், பேரொளி வழிபாடு, காலை 6.30 மணிக்கு மந்திர நீர் குடங்கள் வீதியுலா வருதலை தொடர்ந்து, காலை 7.00 மணிக்கு கோவில் விமானம், பரிவார தெய்வங்களுக்கும், 7.30 மணிக்கு செல்வ கணபதிக்கு மஹா கும்பாபிஷேகமும் செய்விக்கப்பட்டது.மேள, தாளம், இசை முழங்க, வான வேடிக்கைகள் வர்ணஜாலமிட, அவிநாசி ஆதீனம், திருப்புக்கொளியூர், வாகீசர் மடாலய தலைவர் காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 8.30 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் தினமும் காலை 6.30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.