பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
திருப்பூர்: இறைவன் நாமத்தை சொன்னால், குறை என்பது இருக்காது, என ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசினார். திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா துவங்கியுள்ளது. விழாவையொட்டி, பெருமாள் கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது.குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பேசியதாவது:தலைப்பில்லாமல் பேசக்கூடாது; குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது. உலகில் வாழக் கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருப்பது குறை. குறை இல்லாதவர்கள் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து குறை படுவர். தேவர், முனிவர்கள் கூட குறை இல்லாமல் வாழ்ந்தார்களா என்றால், இல்லை; அவர்களுக்கும் குறை இருந்தது.சிவபெருமான் தன்னுடைய எண்ணம் நிறைவேறாமல்,கட்டையாகிபோன இடமே, பூரி ஜெகநாதர் கோவில். ஆண்டுக்கு ஒரு தேர் செய்து விழா கொண்டாடுவர்; கட்டையால் செய்த கிருஷ்ணரை வைத்து வழிபடுவர். சிவனுக்கு, அம்மா, அப்பா, இல்லை என்ற குறை உண்டு. இதனால், பலரிடம் அடிபட்டார். எல்லோரும் ஏன் அடித்தார்கள் என நினைத்து பார்த்தார். தனக்கு, அம்மா இல்லை என புரிந்துகொண்ட அவர், காரைக்கால் அம்மையாரை அம்மாவாக ஏற்றுக் கொண்டாராம்.நாம் கடைசி கலியுகத்தில் உள்ளோம். கலியுகத்தில் எப்போது முக்தி கிடைக்கும். பக்தி கொண்டால் முக்தி கிடைக்கும் என்கின்றனர். தற்போது பக்தி அதிகமாக உள்ளது.பக்தி என்றால், மனதை பக்குவப்படுத்துவது. நாம் கடவுளின் நாமத்தை கூற வேண்டும். நாமத்தால் பலன் கிடைக்கும். பாம்பன் சுவாமிகள் நாமத்தின் மூலம் உயர்வு பெற்றவர்; முருகனிடம் நேருக்கு நேர் தரிசனம் பெற்றவர். சூதாட்டத்தில் திரவுபதியின் ஆடையை எதிரிகள் உருவியபோது, கோவிந்தா என்றார். கோவிந்தா என்றால், கஷ்டத்தை திரும்பத் தராதவர் என்று அர்த்தம். நாமத்தை ஜெபிக்கும்போது, மன நிறைவு உண்டாகும். கோவிந்தா என்ற வார்த்தை நிறைவான மனதை தரும். இறைவன் நாமத்தை சொன்னால், குறை என்பது இருக்காது.இவ்வாறு, அவர் பேசினார்.