பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருஅவதார திருவிழாவை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களின் கருட சேவை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமிதரிசனம் செய்தனர். நவதிருப்பதிகளில் புகழ்பெற்ற திருப்பதியான ஆழ்வார்திருநகரியில் மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வாரின் திருஅவதார திருவிழா வைகாசி மாதம் வருடம் தோறும் நடக்கிறது. இத்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சுவாமி நம்மாழ்வார் வீதி உலாவும் பல்வேறு மடங்களில் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. இரவு வாகனங்களில் சுவாமி வீதிபுறப்பாடும் நடக்கிறது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு பூப்பந்தலில் சுவாமி நம்மாழ்வார் மங்களா சாசனமும், இரவு நவதிருப்பதி எம்பெருமான்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான்சுவாமி, ஸ்ரீவகுணமங்கை, எம்மிடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சின வேந்தபெருமாள், திருக்குளந்தை மாயகூத்தர், தென்திருப்பேரை நகரில் முகில் வண்ணன், துலவல்லிமங்கலம், கேவர்பிரான், செந்தாமரை கண்ணன், திருக்கோளூர் நிச்சோபவிதீர்ன், ஆழ்வார்திருநகரி பொலிந்துநின்ற பிரான் ஆகியோர் கருடவாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், சுவாமி மதுரகவியாழ்வார் தந்தபரங்கி நாற்காலி வாகனத்திலும் எழுந்தருளி குடவரை பெருவாயலில் சுவாமி நம்மாழ்வாருக்கு நவதிருப்பதி உற்சவர்கள் எதிர்சேவை சாதிக்க பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க கற்பூர சேவை நடந்தது. பின்னர் மாடவீதி, ரகவீதிகளில் நள்ளிரவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருக்குருங்குடி பேரருளாளர் ராமானுஜ ஐயர் சுவாமிகிள், நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியம், தாசில்தார் செல்வகுமார், கீழத்திருமாளிகை, சுதர்சனராமாஜசுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.