இசை கேட்டால் பயிர் செழிக்கும். தீபக் ராகம் பாடினால் தீபம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். அமிர்தவர்ஷினியில் பாடினால் மழை பெய்யும் என்றெல்லாம் சொல்வதுண்டு. இசை என்பதற்கு விருப்பம், சம்மதம், மகிழ்ச்சி என்று பொருள். கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் இறைவனை அடைய எளிய வழி இசைமட்டுமே. உயர்ந்த இசை ஞானமான சங்கீதத்தை கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணமாக்கிவிட்டால் மோட்சத்தை கூட எட்டி விட முடியும். யோகம் படிப்பவனோ, தவம் செய்யும் ஞானியோ கடுமையான கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும். ஆனால், இசைக்கலைஞனுக்கு சாரீர கட்டுப்பாடு மட்டுமே போதுமானது. யோகத்தாலும், தவத்தாலும் தனிமனிதனுக்கு மட்டுமே ஆனந்தம் உண்டாகிறது. இசை கலைஞன் பாடும் பாட்டால், அதைக் கேட்கிற எல்லாருக்கும் பரமானந்தம் உண்டாகிறது. அதனால், ஏழிசையாய் இசைப்பயனாய் இறைவன் இருப்பதாக சுந்தரர் தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.