பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
திருக்கழுக்குன்றம்: அகத்தியர் தீர்த்த குளம், போதிய பராமரிப்பின்றி தூர்ந்துள்ளதால், சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட, வேளாளர் தெருவில், அகத்தியர் தீர்த்த குளம் அமைந்துள்ளது. பல்வேறு வரங்களை பெறுவதற்காக, அகத்தியர், இறைவனை வேண்டி தவம் செய்ததால், இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என, பெயர் பெற்றது. மேலும், சுந்தர மூர்த்தி நாயனார், வேதகிரீஸ்வரர் பெருமானை தரிசிப்பதற்காக, இக்குளத்தில் மூழ்கி எழுந்தபோது, சிவபெருமான் அவருக்கு நேரடியாக காட்சியளித்ததாக, வரலாற்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இதன் நினைவாக, வேதகிரீஸ்வரரின் சித்திரை திருவிழாவின், நான்காம் நாள் உற்சவத்தில், வேதகிரீஸ்வரர், தெற்கு ராஜகோபுரம் வழியாக வந்து, இக்குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, சுந்தரருக்கு பொற்றாளம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்தகைய புகழ்பெற்ற இக்குளம், தற்போது, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, புதர் மண்டி தூர்ந்துள்ளது. சீரமைக்கப்படுமா? இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், "புனிதமான இக்குளத்தில், ஏராளமான சாதுக்கள் மற்றும் வெளிமாநில சாதுக்கள் நீராடி, வேதகிரீஸ்வரரை தரிசிப்பது வழக்கம். ஆனால், இதனை முறையாக பராமரிக்காததால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்துள்ளது. இதனால், குளம் முற்றிலும் தூர்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.