பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
செங்கல்பட்டு: ஒழலூர் வரதராஜப் பெருமாள்கோவில், 30 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி, சீரழிந்து வருகிறது. இதை சீரமைத்து, பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர்.பழமையானது செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், நித்ய பூஜைகள் நடைபெறவும், திருவிழாக்கள் நடத்தவும், 25 ஏக்கர் நிலம் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தலத்தில், மூலவர் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். வளாகத்தில், தாயார் ஆண்டாள், ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சேநேயர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. புதர் மண்டி.. பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, பராமரிப்பின்றி, சுற்று பிரகார சுவர்கள் இடிந்து, மாடப்பள்ளி முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவில் வளாகத்தை சுற்றி, ஏராளமான முட்செடிகள் முளைத்து, புதர்போல் காட்சியளிக்கிறது. இக்கோவில் நிலத்தை குத்தகை எடுத்தவர், முறையாக குத்தகை பணத்தை செலுத்தாததால், பூஜைகள் இன்றி, சீரழிந்து வருகிறது. எனவே, இக்கோவிலை புனரமைத்து, பூஜைகள் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""குத்தகைத்தாரரிடம் இருந்து பணம் வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கோவிலை சீரமைக்க, 14வது நிதிக் குழுவில், நிதி பெற ஏற்பாடு செய்யப்படும், என்றார்.