பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. சேலம், செரிரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீசுகவனேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், மே, 17ம் தேதி வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. இதில் தினமும் ஸ்வாமி சுகவனேஸ்வரர் ஸ்வாமி மற்றும் சொர்ணாம்பிகை அம்மன் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.இதில் முக்கிய திருவிழாவான, தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6 மணி முதல் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மன் உற்சவ மூர்த்தி, அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9 மணிக்கு வடம்பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது.சேலம் எம்.பி., செம்மலை, எம்.எல்.ஏ., செல்வராஜ், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனந்தா இறக்கம், இரண்டாவது அக்ரஹாரம், கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில், முதல் அக்ரஹாரம் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது.முதல் அக்ரஹாரம் மற்றும் இரண்டாம் அக்ரஹாரம் வழியாக செல்லும் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டது.இன்று காலை சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.