பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் சக்கர தீர்த்த கிணறு அருகே மூடப்படாத கழிவுநீர் பாதையால் பக்தர்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளறது. சில நாட்களுக்கு முன் நீராட சென்ற, பெண் பக்தர், மூடப்படாத கழிவுநீர் பாதையில் வழுக்கி விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 22 தீர்த்தங்களில் நீராட வரும் பக்தர்கள், தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏற்படும் பாசியில் வழுக்கி விழாமல் இருக்க, கோயில் நிர்வாகம் சிமென்ட் தளத்தை அகற்றி, டைல்ஸ் பதித்தனர். ஆனால், சில தீர்த்த கிணறுகளுக்கு கழிவு நீர் செல்லும் பாதையை மூடாமல் உள்ளதால் பக்தர்கள் விழுந்து காயம் அடைகின்றனர். சில நாட்களுக்கு முன், திண்டுக்கல் கன்னியம்மாள், 80, குடும்பத்தினருடன் கோயிலுக்குள் நீராடி நடந்து சென்ற போது, சக்கர தீர்த்தத்தில், திறந்து கிடந்த கழிவுநீர் செல்லும் பாதையில் வழுக்கி விழுந்ததில் இடது கால் முறிந்தது. உடனே அவரை, யாத்திரை பணியாளர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில அனுமதித்தனர்.தீர்த்த கிணறு அருகே, கழிவு நீர் செல்லும் பாதை மீது மூடி அமைக்கப்படும் என, கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்கோயிலில், மார்ச் மாதம் ஆய்வு செய்த, இந்து அறநிலைதுறை கமிஷனர், தீர்த்த கிணறை சுத்தமாக பராமரித்து, பக்தர்களுக்காக வசதியை மேம்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டும், இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.