கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: ஜூன் 4ம் தேதி அடிக்கல் நாட்டு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2013 10:05
கன்னியாகுமரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பில் கோயில் கட்டப்பட உள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் பிரம்மாண்டமான ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தை நடத்தியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அன்றைய தினம் பங்கேற்ற பக்தர்களின் எண்ணிக்கையை பார்த்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசுவர பெருமாளுக்கு கன்னியாகுமரியில் ஒரு பெரிய கோயில் கட்ட தீர்மானித்தது. திருமலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துவித பூஜைகளும் இங்கு நடைபெறும். விவேகானந்த கேந்திரம் பரிசாக வழங்கியுள்ள நிலத்தில் திருமலை திருப்பதிதேவஸ்தானம் ஒரு திவ்ய ஆலயத்தை விவேகானந்த கேந்திர வளாகத்தினுள் அமைக்கிறது.கோயில் அமையும் இடத்தில் ஜூன் 4-ம் தேதி அதிகாலை 6.30 மணி அளவில் பூமி பூஜை நடக்கிறது. அன்றைய தினம் நடக்கும் பூமி பூஜையில் குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இருந்து பாரம்பரிய பிரசாதங்கள், தலமலர்கள், தல தீர்த்தம் ஆகியவற்றை வரும் ஜூன் 4 அதிகாலை 6 மணிக்கு முன்பாக கோயில்களின் பிரதிநிதிகள் மூலம் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த பூஜையை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆச்சார்யர்களும் மற்றும் அதிகாரிகளும் நடத்துகின்றனர்.