பதிவு செய்த நாள்
30
மே
2013
11:05
ஈரோடு: ஈரோடு கோட்டை வாரணாம்பிகை சமேத ஆரூத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நாளை சிறப்பு குரு பெயர்ச்சி யாகம் நடக்கிறது. ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வது வழக்கம். இந்தாண்டு, மே, 28ம் தேதி காலை ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு, ஈரோடு ஆரூத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை, 6.30க்கு யாகபூஜையுடன், குரு இடப்பெயர்ச்சி சிறப்பு யாகம் துவங்குகிறது. மாலை, 6.30க்கு முதல் கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. நாளை காலை, 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது. 6.50க்கு குரு பெயர்ச்சி அடையும், மகா பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள், குரு பெயர்ச்சி பரிகார பூஜையில் பங்கேற்கலாம். யாகபூஜையில் பங்கேற்க விரும்புவோர், 150 ரூபாயை, கோவில் அலுவலகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி உத்தரவின் பேரில், யாகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.