பதிவு செய்த நாள்
30
மே
2013
11:05
வீரவநல்லூர்: வேதகோஷங்கள், மேளதாளங்கள் முழங்கிட நடந்த அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு கழித்தனர். மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றதும், கஜேந்திர மோட்ச தீர்த்த கட்டமுமான அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு புதிய 5நிலை ராஜகோபுரம் நிர்மானிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நாளான நேற்று (29ம் தேதி) அதிகாலை விஸ்வரூபம், உற்சவ மூர்த்திகள் ஏகாந்த திருமஞ்சணம், யாகசாலை ஹோமங்கள், திவ்ய பிரபந்தம், வேதபாராயணம், மகா பூர்ணாகுதி, திருவாராதனம், யாத்ராதானத்தை தொடர்ந்து புதிய ராஜகோபுரம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் விமானம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் பக்தி கோஷங்கள் முழங்க மேளதாளத்துடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் வீரவநல்லூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நெல்லை எம்பி., ராமசுப்பு, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கண்ணதாசன், தக்கார் வைரவன், ஆய்வாளர் கணேஷ் வைத்தியலிங்கம், நிர்வாக அதிகாரி அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பணி ஏற்பாடுகளை சென்னை ஆர்.ஏ.கே. அறக்கட்டளையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சேரை., டிஎஸ்பி மேற்பார்வையில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.