பதிவு செய்த நாள்
01
ஜூன்
2013
10:06
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று தரும தரிசனத்திற்கு, 17 மணி நேரமும், பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, எட்டு மணி நேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக, 300 ரூபாய் விரைவு தரிசனம், மாலையில் ரத்து செய்யப்பட்டது. கடந்த வியாழக் கிழமை முழுவதும், 60,343 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 28,226 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மாலை நிலவரப்படி, தரும தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளில் நிறைந்து, 2 கி.மீ., தொலைவு வரையும், பாத யாத்திரை பக்தர்கள், 10 காத்திருப்பு அறைகளில் நிறைந்து ஒரு கி.மீ., தொலைவு வரையும் வரிசையில் காத்திருந்தனர். பழுதடைந்த கம்ப்யூட்டர்கள் ; திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வெள்ளி, சனிக் கிழமைகளில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். மலைப்பாதையில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க, மலைப்பாதையில் வரும் அனைத்து வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு டோக்கன் வழங்கப்படுகிறது. நேற்று மாலை, அலிபிரி சோதனைச் சாவடியில் உள்ள கம்ப்யூட்டர்கள் பழுதடைந்ததால், வாகனங்களில் வந்த பக்தர்கள் ஒன்றரை கி.மீ., தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். பழுதை நீக்க, ஒரு மணி நேரத்திற்கும் மேலானதால், சேவை டிக்கெட்கள் பெற்ற பக்தர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.