திண்டிவனம்: திண்டிவனம் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று இரவு தீமிதி திருவிழா நடந்தது.திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதனையடுத்து 24 ம் தேதி துவங்கி மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. மே 14 ம் தேதி முதல் மகா பாரத கூத்து நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தீமிதி திருவிழா நேற்று இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு, அரவான் களப்பலி நிகழ்ச்சியும், தொடர்ந்து துரியோதனன் படுகள நிகழ்ச்சியும் நடந்தது.இதையடுத்து திரவுபதி அம்மனுக்கு, துரியோதனின் ரத்தத்தால் கூந்தலை முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 : 00 மணிக்கு, தீர்த்தகுளம் பகுதியில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு, ஊர்வலமாக கொண்டு வந்தனர். இரவு 7:00 மணிக்கு, முதலில் பூங்கரகமும், திரவுபதி மற்றும் பஞ்சபாண்டவர்கள் தீக்குழி இறங்கிய பின்னர் பக்தர்கள் தீமிதித்தனர்.