பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
10:06
மாணிக்கவாசகருக்கு இறைவன் சிலம்பொலி கேட்பிக்கச் செய்த இடம்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலின் நூறு கால் மண்டபம், வைக்கோலை அடுக்கி வைக்கும் இடமாக மாறி உள்ளது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. இக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. கோயிலின் வெளிப் பிரகாரத்தின் வலப்புறத்தில் "நூற்று கால் மண்டபம் உள்ளது. "திருவாரூர் தேரும், திருவாதவூர் கொடுங்கையும் என்று பெருமை பெற்ற, சிற்ப கலைநயமிக்க கொடுங்கைகள் இம்மண்டபத்தின் சிறப்பு. மாணிக்கவாசகருக்கு இறைவன் "சிலம்பொலி கேட்பிக்கச் செய்த இடம் என்றும், மாணிக்கவாசகரே அமைத்த மண்டபம் என்றும் கூறப்படுகிறது. சேதமடைந்து வரும் இம்மண்டபத்தை பாதுகாக்க சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரிய மண்டபம், தற்போது கோ மடத்திற்கு தேவையான வைக்கோல் வைக்கும் குடோனாக மாற்றப்பட்டுள்ளது. மழை, வெயில் எல்லாவற்றையும் தாங்கும் தன்மை உடையது வைக்கோல். ஆனால், அதை பாதுகாப்பாக, கலைநயமிக்க மண்டபத்தில் வைக்க வேண்டியதில்லையே. மண்டபத்தை பாதுகாக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.