பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
11:06
பழநி: பழநி மலைக்கோவில், ரோப்கார் சக்கரத்தில், பழுதான, "கியர் ஷாப்ட் பாகத்தை, கழற்றும் பணி துவங்கியது. "ரோப்கார் விபத்து குறித்து, நிபுணர் குழுவினர், விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். "ரோப்கார் இயக்கம் மீண்டும் துவங்க, இன்னும் ஒரு மாதம் ஆகும் எனத் தெரிகிறது. பழநி, "ரோப்கார் சக்கரம், நேற்றுமுன்தினம் காலை, பழுதானதால், பக்தர்களை ஏற்றி நகர்ந்து கொண்டிருந்த பெட்டிகள், 250 அடி உயரத்தில் நின்றன. மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பின், பக்தர்கள் மீட்கப்பட்டனர். ரோப்கார் மேல்தளத்திலுள்ள சக்கரத்தின் உள்ளே, பழுதாகியுள்ள, "கியர் ஷாப்ட் கழற்றும் பணி நடந்து வருகிறது. 250 அடி உயரத்தில், தொங்கும் பெட்டிகள், கீழே விழாமல் இருக்க, இரும்பு வடத்தில், "சேப்டி லாக்குகள், பொருத்தப்பட்டுள்ளன. "சக்கரத்தின் உள்ளே பழுதான ஷாப்ட்டை மாற்ற, குறைந்தது ஒரு மாதமாகும் என, கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரோப்கார் பழுது தொடர்பாக ஆலோசனை நடத்த, பொறியாளர்கள் சென்னை சென்றுள்ளனர்; விபத்து குறித்து அறநிலையத்துறை கமிஷனருக்கு விளக்கமளிக்க உள்ளனர். பின், ரோப்கார் நிபுணர் குழு, பழநியில் ஆய்வு நடத்தும் என, தெரிகிறது. பழநி கோவிலுக்கு மலைப்பாதை, "விஞ்ச் மூலம் மட்டுமே, இனி செல்ல முடியும். கோவில் இணை கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், "விஞ்ச் இயக்கம் குறித்து, நேற்று காலை, ஆய்வு செய்தனர்.