பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
05:06
அம்மா! தாங்கள் என்னைப் பெற்றவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ஆனால், ஊரைக் கண்டு அஞ்சி அன்றொரு நாள் என்னை உதாசீனப்படுத்தினீர்களே! அதை நினைத்துப் பாருங்கள். நான் ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்ததால், பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? அனைத்து வித்தைகளும் தெரிந்தாலும், க்ஷத்திரியனல்லாத சூத்திரனாக வளர்ந்ததால், என்னை துரோணர், கிருபர் போன்றவர்கள் அவமானப்படுத்தினார்களே! உன் பிறப்பை பற்றி சொல் என்றார்களே! அப்போது, நான் தலை குனிந்து நின்றேன். அந்த சமயத்தில், எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டவன் யார்? துரியோதனன்.. அம்மா அவன் எனக்கு தெய்வம் அம்மா! நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
சோறிட்ட ஒருவனை தூக்கி எறிந்து விட்டு நன்றி மறந்து வரலாமா? எச்சில் சோற்றுக்கே வழியில்லாதவனை ராஜா என்ற அந்தஸ்துக்குள்ளாக்கியவனை உதாசீனம் செய்யலாமா? என்று அவன் சொல்லவும், பதில் சொல்ல முடியாமல் கண்ணீரை பதிலாகத் தந்தாள் குந்தி. கர்ணன் தொடர்ந்தான்.
அம்மா! துரியோதனின் நட்புக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். நானும், அவனது மனைவி பானுமதியும் ஒருநாள் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தோம். இந்நிலையில், துரியோதனன் அந்த அறைக்குள் நுழைய, கணவனுக்கு மதிப்பளிப் பதற்காக அவள் எழுந்து நின்றாள். ஆட்டத் தில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தான் பாதியிலேயே எழுகிறாளோ என நினைத்து, அவளது புடவையைப் பற்றி இழுத்தேன். அப்போது, இடுப்பில் கட்டியிருந்த முத்துக்கள் சிதறின, என சொல்லிக் கொண்டிருந்த போது, பதறிய குந்திதேவி, அப்புறம் என்ன நடந்தது? என ஆவலாகக் கேட்டான். நான் ஏறிட்டுப் பார்த்த போது, துரியோதனன் அங்கு நின்றான். நண்பா! எதற்காக ஆட்டத்தை விட்டு எழுந்தாய். சிந்திய முத்துக் களை எடுத்து தரவா அல்லது கோர்த்து தரவா? என்றான். இப்படிப்பட்ட மகத்துவமான நண்பன், உலகத்தில் யாருக்கு கிடைப்பான். என் மீதும், பானுமதி மீதும் அவன் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தால், இப்படியொரு வார்த்தை அவனது வாயிலிருந்து வந்திருக்கும்! வியர்த்து விறு விறுத்து நின்ற எனக்கு, அந்த வார்த்தை பனிக்கட்டிகளை அள்ளிக் கொட்டியது போல் இருந்தது தாயே! அந்த அன்பு தெய்வத்தை விட்டு நான் எப்படி பிரிய முடியும்? சொல்லுங்கள், என்றான்.
இவ்வளவு சொன்ன பிறகும், குந்தி சுயநலம் கருதியே பேசினாள். தன்னோடு வரும்படி மகனிடம் கெஞ்சினாள். கர்ணன் அவளிடம், அம்மா! இது நியாயமற்ற பேச்சு! போர் மூண்டுவிட்டது. இந்த இக்கட்டான நிலையில் நான் உங்களோடு வரமாட்டேன். மேலும், விதி என் வாழ்வில் மிகத் தீவிரமாகவே விளையாடுகிறது. இல்லாவிட்டால் தாய் சொல் கேளாதவன், தம்பியரைக் கொல்ல நினைப்பவன் என்ற அவலங்களெல்லாம் எனக்கு ஏற்படுமா? ஆயினும், விதிவிட்ட வழியில் நான் சொல்கிறேன். பாண்டவர்களுடன் என்னால் சேர இயலாது. அதைத் தவிர எதைக் கேட்டாலும், உங்கள் மகன் தருவான். வாக்கு தவறமாட்டான் உங்கள் பிள்ளை, எனக்கூறிய கர்ணன் தாயை பாசத்துடன் அணைத்து கொண்டான். இவ்வளவு சொல்லியும் மறுத்து விட்டாயேடா! போகட்டும்! போர்க்களத்தில் நீ களம் புகுந்தால், நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் அர்ஜுனன் மீது எய்யக்கூ டாது. மற்ற பாண்டவர்களும் உன் கையால் அழியக்கூடாது, என இரண்டு கோரிக்கைகள் வைத்தான். வாக்கு தவறாத மாமன்னன், எந்த யோசனையும் செய்யாமல் இந்த வேண்டுதல்களை ஏற்றான். அது மட்டுமின்றி, அம்மா! ஒரு மாவீரன், ஒரு அஸ்திரத்தை ஒரு முறை எய்தே எதிரியை அழிக்க வேண்டும். அதுதான் அவனுக்குப் பெருமை. நீங்கள் சொன்னதற்காக மட்டுமின்றி, இந்த காரணத்துக்காகவும் நான் ஒருமுறைக்கு மேல் நாகாஸ்திரத்தை எய்யமாட்டேன். தாங்கள் கேட்டது போல் மற்ற பாண்டவர்கள் மீதும் என் கை படாது, என்று சத்தியம் செய்து கொடுத்தான். குந்தி அவனைத்தழுவி ஆசிர்வதித்து புறப்பட்ட வேளையில், அம்மா! புறப் பட்டு விட்டீர்களா! பிள்ளையிடம் வரம் பெற்ற நீங்கள், பிள்ளைக்கு ஏதாவது தர வேண்டாமா? என்றாள்.
குந்தி குழப்பமும் ஆனந்தமும் கலந்த நிலையில், பெற்றவுடன் பிரிவை பரிசாக அளித்த இந்த பாவியிடம் என்னடா கேட்கப் போகிறாய்? நீ என்ன கேட்டாலும் தருவேன், என்றாள். அம்மா! நான் உங்கள் மகன் என்பது பாண்டவர்களுக்கு தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், எந்த யோசனையும் செய்யாமல், அவர்கள் என்னிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விடுவார்கள். அப்படி தரப்படும் நாட்டை, என் நண்பன் துரியோதனனிடம் சற்றும் யோசிக்காமல் நான் கொடுத்து விடுவேன். அதில் தங்களுக்கு எப்படி உடன்பாடு ஏற்படும்? அத்துடன், போர்க்களத்தில் நான் ஒருவேளை அர்ஜுனன் கையால் மடிய நேர்ந்தால், நீங்கள் என்னை தங்கள் மடியில் தூக்கி வைத்து, நான் உங்கள் மகன் என்ற உண்மையை ஊருக்கு உரைக்க வேண்டும். என் பிறப்பின் களங்கம், இறப்புக்கு பின்பாவது நீங்க வேண்டும், என்று கண்ணீர் வடித்தான். குந்தி அவனுக்கு ஆறுதல் கூறி, இப்படி ஒரு நிலைமை எந்த பிள்ளைக்கும், எந்த தாய்க்கும் உலகில் ஏற்படக்கூடாது எனச் சொல்லி புறப்பட்டாள். கிருஷ்ணரிடம் சென்ற அவள், கர்ணனிடம் பேசியது பற்றி தெரிவித்தாள். நினைத்தது நடந்ததை எண்ணி அந்த மாதவனும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர், தர்மரை தேடிச் சென்ற அவர், தான் தூது சென்ற வரலாறு முழுவதையும் சொன்னார். அதுகேட்டு தர்மர் கோபமடைந்தார். கிருஷ்ணரை அவமதிப்பவர்கள் அவர் மதிப்பதில்லை. மேலும், ஒரு தூதரை நடத்தும் விதம் கூட தெரியாத துரியோதனன், இனி உலகில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். போருக்கான ஆயத்தப்பணிகளைச் செய்தார். திரவுபதிக்கு பாண்டவர்கள் மூலம் ஆளுக் கொருவராக ஐந்து மகன்கள் பிறந்தனர். அவர்கள் விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், ஜெயசேனன் ஆகியோர். இதுதவிர பீமனுக்கும், இடும்பிக்கும் பிறந்த கடோத் கஜன், அர்ஜுனன் நாகலோகம் சென்ற போது, நாககன்னிக்கும் அவனுக்கும் பிறந்த அரவான் ஆகியோரை அவர் வரவழைத்தார். மற்ற தேசத்து ராஜாக்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும்படி ஓலை அனுப்பினார்.