பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
11:06
பவானி: பவானி கூடுதுறையில் உள்ள ஸ்ரீவேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக, 16 இடங்களில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி, பவானி, கண்களுக்கு தெரியாத அமுத நதி ஆகியவைகள் சங்கமிக்கும் இடம் என்பதால், பவானி கூடுதுறை காசிக்கு அடுத்தபடியாக பரிகாரம் செய்யும் இடமாக, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம், வேதநாயகி சன்னதி, சங்கமேஸ்வரர் சன்னதி உள்பட, 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் வெளி நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. தற்போது, சமூக விரோதிகளால் பக்தர்களுக்கும், கோவிலுக்கும் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கோவிலில் உள்ள பழைய கேமராக்கள் மாற்றப்பட்டு, அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதுறை பின் பகுதியில் உள்ள பரிகார மண்டபம், காயத்ரி லிங்கேஸ்வரர் கோயில் முன்பு செய்யப்படும் பரிகார மண்டபம், கூடுதுறைக்குள் நுழையும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் பற்றி அறிய கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இக்கேமராக்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு, கோவில் அலுவலகத்தில் உள்ள சர்வரில் பதிவாகும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கோவில் நிர்வாகம் மூலம், 16 இடங்களில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், சமூக விரோதிகள், போலி பக்தர்கள் நடமாட்டம் தடுக்கப்படும், என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.