பதிவு செய்த நாள்
26
ஜூன்
2013
11:06
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலை அருகே, புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி, தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள முருகனின் திருப்பாதங்கள் படிந்த கல்லை அகற்றக்கூடாது என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, கோவில் நிர்வாகம் தார்ச் சாலை அமைத்தது. இச்சாலை வழியாக, தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களில், பக்தர்கள் சென்று முருகனை வழிப்பட்டு வருகின்றனர். மலைப்பாதையில் நெரிசல் முக்கிய விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக, 5,000க்கும் மேற்பட்ட, வாகனங்களில் பக்தர்கள் சென்று வழிப்படுகின்றனர். இதனால், மலைப் பாதையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவில் நிர்வாகம் மலைக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில், போவதற்கும், வருவதற்கும், தனித்தனியாக இணைப்பு சாலை அமைக்க திட்டமிட்டது. இதற்கான செலவு தொகையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் தன் சொந்த செலவில் செய்வதாக ஏற்றுக் கொண்டு, 2.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தார். பின்னர், நான்கு நாட்களாக, புதிய இணைப்பு அமைக்க பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இதற்காக, அங்குள்ள கற்களை அகற்றி சாலை போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, பக்தர்கள் சிலர், புதியதாக சாலை போடும் இடத்தில், முருகனின் திருப்பாதங்கள் படிந்த கல் உள்ளது. அதை அகற்றக்கூடாது என, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அறிவுறுத்தல்: இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறியதாவது: மேற்கண்ட இடத்தில் புதிதாக இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. என்னிடத்திலும் சில பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் அப்பகுதியில் முருகன் திருப்பாதம், புத்தர் திருப்பாதம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பொறியாளர்களை அழைத்து, முருகனின் திருப்பாதங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல், சாலை அமைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.