பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
பழநி: தமிழகத்தில் மழை வேண்டி, பழநி தேவஸ்தான உபகோயில்களில், "வருண ஜபம் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. மழையின்றி, இந்தாண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகள், குளங்களில் தண்ணீர் இல்லை. சிறப்பு பூஜை: மழை பெய்ய வேண்டி, லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில், ஆண்டாள் பாசுரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றிலிருந்து பாடல்களை பாடி சிறப்பு யாக பூஜை நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில், கழுத்தளவு தீர்த்த தொட்டியில், அர்ச்சகர்கள் அமர்ந்து, வருண பகவானை நோக்கி, திருஞானசம்பந்தர் பாடிய பண்மேகநாத குறிஞ்சி பதிகம் பாடி மழையை வேண்டினர். கோயில் உட்பிரகாரத்தில் நந்திக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. கலசங்கள் வைத்து வருண யாக பூஜை நடந்தது. மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மீனாட்சி கோயிலில் யாகம்: மழை வேண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருண யாகம் நடந்தது. சுவாமி சன்னதி கொடிமரம் அருகே காலை 7 மணிக்கு நடந்த யாகத்திற்கு இணை கமிஷனர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.