பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
திருப்பூர்: பகவான் கிருஷ்ணர், தன் பக்தர்களுக்காக மனமிறங்கி, தன்னிலை இறங்கி வந்து, பல சிரமங்களை சுமந்தவர், என ஆன்மிக சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசினார். திருப்பூர் பி.என்., ரோடு, ஸ்ரீசத்ய சாயிபாபா கோவிலில் சத்யசாய் சப்தாஹ தேவாமிர்த சொற்பொழிவு நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது: தர்மம் காக்கவும், தன்னை நம்பிய பக்தர்களை காக்கவும் கிருஷ்ண பரமாத்மா, பல்வேறு சிரமங்களை அனுபவித்தார். ஜெயந்திரனின் உயிரைப் பறிக்க, தன் சகராயுதத்தை விட்டு சூரியனை மறைத்தான். பாரத போர் துவங்கும் முன், துரியோதனன், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம், ஆருடம் கேட்டான். "எப்போது போர் துவங்கினால் வெற்றி பெற முடியும் என கேட்டதற்கு, சகாதேவன், "அமாவாசை நாளில் களப்பலி கொடுத்து போரைத் துவங்கினால் வெற்றி நிச்சயம் என்றார். பொய் பேச விரும்பாத அவர், அப்படி தெரிவித்தார். இதை கிருஷ்ணன் மாற்றியமைக்க திட்டமிட்டு, அமாவாசைக்கு இரண்டு நாள் முன்பே, யமுனை கரையில் தர்ப்பணம் செய்ய, அதைப் பார்த்து முனிவர்களும் அன்று அமாவாசை என்று தர்ப்பணம் செய்தனர். குழப்பம் அடைந்த சூரியனும், சந்திரனும், தேவர்களை அழைத்துச் சென்று, கிருஷ்ணனிடம் கேட்டனர். சந்திரனும், சூரியனும் தற்போது நேர்கோட்டில் வந்ததால், இன்று அமாவாசை என கூறினார் கிருஷ்ணர். இப்படி, தன் பக்தர்களை காப்பாற்ற இயற்கையையே மாற்றி அமைத்தார் கிருஷ்ணர். போரின்போது, பாண்டவர்களை மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள் அழிப்பேன் என பீஷ்மர் சூளுரைத்தார். இதை தடுக்கும் வகையில், திரவுபதியை முகத்தை மூடிக் கொண்டு சென்று அவர் காலில் விழுந்து "தீர்க்க சுமங்கலியாக இரு, என ஆசிர்வாதம் பெற வைத்தார் கிருஷ்ணர். அப்போது, திரவுபதியின் கால் செருப்புகளை, தன் கைகளில் ஏந்திக் கொண்டு சென்றான். போர்க்களத்தில், ரதத்தில் இருந்து முதலில் கீழே இறங்க வேண்டிய கிருஷ்ணர், முதலில் அர்சுனனை இறங்க செய்தார். பீஷ்மர் விட்ட மந்திர அம்புகள் குத்தி நின்ற தேர், கிருஷ்ணர் இறங்கியதும் தீப்பற்றி எரிந்தது. இதற்கு கிருஷ்ணன் கூறியது என்னவென்றால், நீரின் தன்மை குளிர்ச்சி; தீயின் தன்மை வெப்பம். பக்தனுக்கு உதவி செய்வது எனது தன்மை என்பது தான். சுவாமி சத்யசாயி, "நான் கடவுள்; நீயும் கடவுள். நான் என்னை உணர்ந்து கொண்டேன்; நீ உன்னை உணர்ந்தால் போதும். உயர்ந்த சிந்தனை தேவை. அதன் மூலம் உலகம் சிறப்படையும். தனி மனித சிறந்தவனாக மாறினால் ஒட்டுமொத்த சமுதாயமும் மாறும். அகந்தை அழிய வேண்டும். பக்தியுடன் இறைவனை வழிபட வேண்டும், என்று கூறியுள்ளார். அதன்படி நாம் நடக்க வேண்டும். இவ்வாறு, வாசுதேவன் பேசினார்.