பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
தஞ்சாவூர்: தஞ்சையில், பெரியகோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தில், நடப்பு மாதம் உண்டியல் திறப்பு மூலம் இந்து அறநிலைத்துறைக்கு எட்டே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சையில், ராஜராஜசோழன் கட்டிய பெரியகோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலத்தினர் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அதிகளவில் வந்து பார்த்து, வியந்து செல்கின்றனர். அதனால், பெருமளவு வருவாய் உண்டியல் மூலம் இந்து அறநிலையத்துறைக்கு கிடைத்து வருகிறது. கோவிலுள்ள பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, வராகி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, கருவூரார் சன்னதி உள்ளிட்ட 11 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவை மாதந்தோறும் திறக்கப்பட்டு, காணிக்கையாக பக்தர்கள் செலுத்திய பணத்தை எண்ணுவது வழக்கம். இதன்படி, நடப்பு மாதத்துக்கு 11 உண்டியல்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இப்பணியில் மகளிர் குழுவினர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். உண்டியல் எண்ணும் பணியை தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ""பெரியகோவிலில் இருந்த 11 உண்டியல்களில், நடப்பு மாதம், எட்டு லட்சத்து 77 ஆயிரத்து 65 ரூபாய் பக்தர்கள் காணிக்கை பணம் இருந்தது. இம்முறை, தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஏதும் இல்லை, என்றனர்.