பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், நான்கு ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. 7ம் நூற்றாண்டில், முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில், கடந்த 1999ம் ஆண்டு, திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடந்தது. அதை தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
திருப்பணி: இதற்காக, அறநிலையத் துறை ஆணையர் பொது நல நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாயும், நன்கொடையாளர்கள் மூலம், 1.50 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன. ஆணையர் பொது நல நிதியின் மூலம், ரிஷபா தீர்த்த குளம், மதில் சுவர், வாகன மண்டபம், உற்சவர் மண்டம், நடராஜர் மண்டபம், தாழக்கோவில் பதிவேடு அறை, மடப்பள்ளி, சர்வதீர்த்த மண்டபம், இரண்டாம் பிரகார மண்டபம், நான்கு ராஜகோபுரங்கள், ரிஷி கோபுரம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது. அதே போல், நன்கொடையாளர்கள் நிதியின் மூலம், வண்டு விநாயகர் கோவில், பக்தவச்சலேஸ்வரர், துவர விநாயகர், முருகர் கோவில்கள், காளத்திநாதர், மாணிக்கவாசகர், ஆத்மநாபர் சோமஸ்கந்தர், ஆறுமுகசாமி, பிரத்யட்ஷ ஈஸ்வரர், நடராஜர், நான்கு கால் மண்டபம், அன்னதான கூடம், ஏகாம்பரநாதர் திருக்கோவில், நந்தவன மதில் சுவர், மூன்றாம் பிராக மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஜம்புகேஸ்வரர் கோவில், அருணாச்சலேஸ்வரர் ஆகியவற்றில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்பார்ப்பு: கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட கோவில் திருப்பணிகள், இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களால், பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.