பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
காங்கயம்: காங்கயம், பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதோடு, வீட்டுமனைகளாக பிரித்து விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 1,500 ஆண்டு பழமையான பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு என, காங்கயம்-தாராபுரம் ரோட்டில், களிமேடு பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. ரோட்டின் அருகிலேயே, அரசு அலுவலகங்கள் சுற்றிலும் உள்ளதால், நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை இருக்கும். இந்நிலத்தை, 1,500க்கும் மேற்பட்டோர், வீடுகள், வணிக வளாகங்கள், சர்ச் உள்ளிட்டவை கட்டி ஆக்கிரமித்துள்ளனர்; பலர் விற்பனையும் செய்து வருகின்றனர். இதில், நத்தக்காடையூர் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஆக்கிரமித்துள்ளவர்கள், வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். கோவிலில் பூஜைகள், விழாக்கள் நடத்துவதற்காக, மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை பலர் விற்பனையும் செய்துள்ளனர். கோவிலுக்கு என காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை உள்ளது. தமிழக அரசு, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறியவும், இனாம் ஒழிப்பு சட்டம், அதற்கு முன்பும், கோவில் மற்றும் கோவில் ஊழியத்திற்கு என வழங்கப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த முழுமையான ஆவணங்கள் தயாரிக்கப்படாமல் உள்ளது. இது வரை 116 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன; அவையும் மீட்கப்படாமல் உள்ளன.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமாக 116 ஏக்கர் நிலங்கள் உள்ளன; 102 ஏக்கர் நிலங்களை மீட்டு தரக்கோரி அறநிலைத்துறை உதவி ஆணையர் கோர்ட்டில், 78 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. 14 ஏக்கர் நிலம் குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய ஆவணங்கள் அடிப்படையில், பழைய ஆவணங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது, என்றனர்.