பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நெய்தீபம், எள்விளக்கு விற்பனையை இன்று முதல் கோயில் நிர்வாகம் ஏற்கிறது. கோயிலில் சுவாமிகளுக்கு நெய் தீபம், சனீஸ்வர பகவானுக்கு எள் விளக்கேற்றியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். இவற்றை ஒப்பந்த அடிப்டையில் தனியார் விற்றனர். நெய்தீபம் ஒன்று ரூ.5க்கு விற்கப்பட்டது. எள் விளக்கு முதலில் சிறிய அகல் விளக்குகள் மூன்று, ரூ.10 ரூபாய்க்கும், அடுத்து ஒன்று ரூ.5க்கும், பின், சற்று பெரிய அகல் விளக்குகளாக மாற்றி ஒன்று ரூ.பத்துக்கும் விற்றனர். ரூ.30க்கு மூன்று விளக்குகள் வாங்கவேண்டும் என பக்தர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதை தவிர்க்க, இன்று முதல் நெய் தீபம், எள்விளக்கு விற்பனையை கோயில் நிர்வாகம் மேற்கொள்கிறது. துணை கமிஷனர் பச்சையப்பன் கூறியதாவது: நெய் விளக்கில் நெய் இருப்பதாக தெரியவில்லை. அந்த விளக்கேற்றுவதால், புகை அதிகரித்து, தூண்கள் பாதிப்படைகின்றன. எள்விளக்கில் பயன் படுத்தப்படும் எண்ணெய் தரமற்றதாகவும், விலையும் அதிகமாகவும் விற்கப்படுவதால், அவற்றின் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, நாங்களே விற்கிறோம், என்றார்.