ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு. ஆறுமுகனை வணங்குவோருக்கு, எப்படிப்பட்ட கஷ்டமும் நீங்கி மனஆறுதல் கிடைக்கும். கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப் பட்டவன். அவனது மந்திரம் சரவணபவ. அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள். மஹா ஸ்கந்த சஷ்டி எனப்படும் ஆறாம் நாளில், அவன் சூரசம்ஹாரம் செய்தான். சஷ்டி என்பது வளர்பிறையின் ஆறாம் நாள். இத்திதிக்கு நாயகன் குகப் பெருமான். சுப்ரமண்ய மாலா ஸ்தோத்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி என்னும் திதியில் விருப்பமுள்ளவன் என்று இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜை. இந்த வேளையில் செய்யப் பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன்.