பதிவு செய்த நாள்
04
ஜூலை
2013
10:07
கன்னியாகுமரி: சுவாமி விவேகானந்தர் மகாசமாதியடைந்த 111-வது ஆண்டை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் இன்று அன்னபூஜை நடக்கிறது. வீரதுறவி சுவாமிவிவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி மகாசமாதி யடைந்தார். அந்த நாளை விவேகானந்தகேந்திரம் சார்பில் தொண்டர்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர அவைகூடத்தில் இன்று அன்னபூஜை நடக்கிறது. கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கிராம முன்னேற்ற தொண்டர்கள் வீடு, வீடாக சென்று பிடி அரிசி திட்டம் மூலம் அரிசி சேகரிப்பார்கள். இப்படி சேரிக்கும் அரிசியை கொண்டுவந்து அவற்றை மலை போல் குவித்து வைப்பார்கள். வண்ண மலர்களில் அலங்கரிக்கப்பட்ட அரிசியின் மேல் அன்னபூரணி தேவியின் விக்ரகம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தேத்திரம், பகவத்கீதையின் 11-ம் அத்தியாத்திலுள்ள விஸ்வரூபதரிசனம் ஆகியவை ஓதப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு கேந்திர துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். பொது செயலாளர் பானுதாஸ், நிர்வாக செயலாளர் அனுமந்தராவ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மதியம் 2 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு இன்னிசை கச்சேரி, 6 மணிக்கு கிராம முன்னேற்ற தொண்டர்களின் கலைநிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. அன்னபூஜை செய்யப்பட்ட அரிசிகளை விவேகானந்த கேந்திராவின் கீழ் செயல்படும் பால்வாடி, முதியோர் இல்லம், மாற்று திறனாளிகள் இல்லம் ஆகியவற்றிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன், கேந்திர நிர்வாக அதிகாரி கிருஷ்ண சாமி, பி.ஆர்.ஓ., ரகுநாதன் நாயர் ஆகியோர் செய்துள்ளனர்.