பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
10:07
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவில், அகோபில மடம் ஆதீன பரம்பரையைச் சேர்ந்த பழமை வாய்ந்த, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவ விழா, கடந்த, 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. கோவில் அருகே உள்ள ஹிருத்தாபநாசினி குளத்தில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், புனித குளத்தில் தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. தெப்ப உற்சவத்தை ஒட்டி, சுவாமிக்கு தினமும் திருமஞ்சனமும், ஆராதனையும், முக்கோட்டி தரிசனமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அமாவாசையன்று கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, திருக்குளத்தின் உட்பகுதியில், பிருந்தாவனத்தின் அருகிலேயே, வீரராகவ சுவாமி அன்னதான டிரஸ்ட் சார்பில், 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவிலின் கவுரவ ஏஜன்ட் சம்பத் செய்தார்.