வள்ளியூர்: தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய 128வது ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. தெற்குகள்ளிகுளும் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 128வது ஆண்டு திருவிழாவாக வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலையில் முதல் திருப்பலியும், பின்பு திருயாத்திரையுடன் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது.அதனை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலை 6.30 ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.8ம் திருவிழாவான வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியான புது நன்மை தினம் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.9ம் திருவிழாவான 4ம் தேதி மாலையில் பாளை., மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 5.30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலி பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார், உதவி பங்குதந்தை செல்வரத்தினம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தினர், தெற்கு கள்ளிகுளம் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.