பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
03:07
இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மனநிலையும் ஏற்படும்.
ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
*செவ்வாயன்று விரமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். புதனன்று விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். வியாழன்று விரதமிருந்தால், ஆசிரியர் பதவி பெறலாம். (டி.இ.டி. தேர்வு எழுதுவோர் சென்று வரலாம்)
*வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப் போல் செல்வவளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்க்குணங்கள் நீங்கப்பெறுவர்.
* ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். இது எதுவுமே இங்கு தேவையில்லை.. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்... பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
*அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்... ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்...நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்... பிறரை ஏமாற்றி இருந்தால்.. ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்...இந்த வரராசைக்கு வந்தால் போதும். கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
*இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார். அதனால், இதை விட உயர்ந்த தலம் வேறில்லை.
*சிவகணங்களில் நந்ததீஸ்வரர், நவரத்தினங்களில் வைரமும், ராசிகளில் சிம்மமும், தேவர்களில் இந்திரனும், மிருகங்களில் கஸ்தூரி பூனையும், இலைகளில் வில்வமும், பாணங்களில் பாசுபதாஸ்திரமும், சக்திகளில் உமாதேவியும், பூக்களில் தாமரையும், குருக்களில் வியாழ பகவானும், முனிவர்களில் அகத்தியரும், பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ...அதுபோல், தலங்களிலேயே வராரசை தான் உயர்ந்தது.
*இதற்கு புன்னைவனம், சீரரசை என்றும் பெயருண்டு. இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்தபலன் கிடைக்கும்.
*ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால், தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும். இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
*இங்கே தன் ஒரு மகளுக்கு திருமணம் முடித்தால் கூட, ஆயிரம் கன்னிகாதானம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
*இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
*இந்தத்தலம் எதுவென இன்னும் புரிய வில்லையா? சங்கரனாகிய சிவனும், நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கரநாராயணர் கோயில்.... கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்...ஊர் பெயர் சங்கரன்கோவில். இங்கே வரும் 22ல் ஆடித்தபசு விழா நடக்கிறது. வாழ்வில் ஒருமுறையாவது இங்கே சென்று வந்து விடுவீர்கள் தானே!இருப்பிடம்: மதுரையில் இருந்து 120 கி.மீ.,
போன்: 04636 222 265.