பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
09:07
சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான கோயில்களில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலும் ஒன்று. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானது இந்தக்கோயில். அதனால் தானோ என்னவோ, இந்தக்கோயிலின் நிர்வாகம் கோயிலில் ஏதாவது ஒரு குளறுபடி செய்து கொண்டே இருக்கிறது. ஏற்கெனவே இருந்த கோயில் நிர்வாகம் கருமாரி அம்மன் மூலஸ்தானத்திற்கு மேல் உள்ள கோபுரத்தை தங்கமயமாக்கும் போது அதில் நிறைய ஊழல் செய்து, தற்போது தங்ககோபுரம் கருத்து, பரிதாபமாக காட்சி தருகிறது. அதற்கு அடுத்து கொஞ்ச நாள் நிம்மதியாக இருந்த கோயிலில், தற்போது உள்ள கோயில் நிர்வாகம் குளறுபடி செய்ய ஆரம்பித்துள்ளது. கருமாரியம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக பிரசாத ஸ்டால் இருந்து வந்தது. ஆண்டுதோறும் இந்த பிரசாத ஸ்டால் ஏலம் விடப்பட்டு அந்த தொகை மூலம் கோயிலுக்கு நிறைய வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் சென்ற மாதம் பிரசாத ஸ்டாலின் ஏலம் முடிவடைந்த நிலையிலும் கூட, பிரசாத ஸ்டாலை மீண்டும் ஏலத்திற்கு விடாமல் பயனற்ற நிலையில் உள்ளது.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடிமாதம் பிறந்துள்ள, இந்த காலங்களில் கோயில் பிரகாரத்தில் பெண் பக்தர்கள் அங்கப்பிரத்தட்சணம், அடிப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை செய்து அம்மனை வழிபடுவர். நேர்த்திக்கடனை முடித்த பக்தர்கள் இதுவரை இந்த பிரசாத ஸ்டாலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விரதத்தை முடித்து விட்டு அம்மனை வணங்கி செல்வர். ஆனால் கடந்த மாதத்திலிருந்து பிரசாத ஸ்டாலினால் எந்த பயனும் இல்லாத நிலையில் பக்தர்கள் எங்கிருந்து பிரசாதம் வாங்கி சாப்பிடுவர். அத்துடன் ஏலம் விடாத காரணத்தினால் கோயிலுக்கும் வருமானம் இல்லாத நிலை உள்ளது. இப்படி பிரசாத கடை ஏலம் விடுவதில் இன்னும் காலதாமதம் ஏற்பட்டால் ஏலத்தொகையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டு, கருமாரியம்மனின் கோபத்திற்கும் ஆளாகும் நிலை ஏற்படும் என கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கருமாரியம்மன் கோயிலில் தற்போது இணை ஆணையாளராக காவேரி உள்ளார். இவர் இக்கோயிலில் உள்ள சூப்பரிண்டன்ட் ராஜலட்சுமி, மேனேஜர் பாஸ்கர் ஆகியோர் கூறுவதை கேட்டு இது போன்று கோயிலுக்கு வருமானம் வரவிடாமலும் மற்றும், கோயில் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் வகையிலும் நடந்து கொள்வதாக பக்தர்கள் புலம்புகின்றனர். இதில் சூப்பரிண்டன்ட் ராஜலட்சுமி, கோயில் தலைமை நிர்வாகத்தை சரிக்கட்டி கொண்டு, தனக்கு பணி மாற்றம் வராமல் பார்த்து கொள்வதுடன், கோயிலை விட்டு செல்லாமல், கோயிலை ஒரு வழி பண்ண காத்திருப்பதாக உடன் பணி புரிபவர்கள் வேதனைப்படுகின்றனர்.
எது எப்படியோ முதல்வர் ஜெயலலிதா திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் மேல் அதிக பக்தி கொண்டு வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றால், கோயிலில் பணிபுரியும் அதிகாரிகள் கோயிலின் வளர்ச்சிப்பணிக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவது மிகவும் வேதனை அளிப்பதாக கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோயில் நிர்வாகம் விரைவில் பிரசாதக்கடையை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், திருக்கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.