பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
சென்னை: கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, நிலம் மீட்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நகரில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 1,500 சதுரடி பரப்பளவுள்ள நிலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முத்துசாமி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. ஆனால், சண்முகம் என்பவர், அதை ஆக்கிரமித்து வைத்திருந்தார். அவரை, அங்கிருந்து வெளியேற்ற, இந்து சமய அறநிலைய துறையின் சார்பில், சென்னை உரிமையியல் கோர்ட்டில், 1999ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தீர்ப்பை செயல்படுத்த, கோவில் சார்பில், 2001ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. நிறைவேற்று மனுவின் மீதான விசாரணையில், கோவிலுக்கு அந்த நிலத்தை சுவாதீனம் பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர், ஜெகநாதன் தலைமையில், அமீனா மற்றும் போலீசார் உதவியுடன், நிலம் மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.