கர்நாடகத்தில் உள்ள திருத்தலம் திருநாராயணபுரம். இங்கு சம்பத்குமாரர் என்ற திருநாமத்தோடு பெருமாள் அருள்புரிகிறார். இங்குள்ள உற்சவருக்கு செல்லப்பிள்ளை என பெயர். ராமானுஜர் இதோ! என் செல்லப்பிள்ளை! என்று அழைத்ததால் இவருக்கு இப்பெயர். சோமயாஜியாண்டான் என்றொரு பக்தர் செல்லப்பிள்ளையைப் பாடி மகிழ்வது வழக்கம். அவருடைய பக்திக்கு மயங்கிய பெருமாள், நேரில் வந்து ஆடத் தொடங்கினார். ஒருநாள் சோமாயாஜியாண்டான் பாடி முடித்ததும், பெருமாளே! எனக்கு மோட்சம் கொடு,என்று கேட்டார். நீர் பாடினீர்! நான் ஆடினேன்! பாட்டுக்கு ஆட்டம் சரியாகி விட்டது. இதைக் கொண்டு மோட்சம் கேட்பது நியாயமா? மோட்சம் பெற விரும்பினால் ராமானுஜரின் திருவடியைப் பிடித்துக் கொள், என்றார். குரு இல்லாமல் இறையருளைப் பெற முடியாது என்பதை இதன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். இங்கு பாஷ்யக்காரர் என்னும் பெயருடன் ராமானுஜர் தனி சந்நிதியில் இங்கு வீற்று இருக்கிறார்.