நீலவண்ணக் கண்ணன் வெண்ணெய் திருடுவதற்காக, ஆயர்பாடியில் கோபியர் ஒருத்தியின் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் உறியைத் தொட்ட மாத்திரத்தில் அவர்கள் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த மணி கணகண என ஓசை எழுப்பியது. ஏ! மணியே! கோபியரிடம் என்னை இப்படி காட்டிக் கொடுக்கிறாயே!, என்றான் கண்ணன். ஒன்றும் சொல்லாமல் மணி அமைதியானது. பானையைக் கையில் எடுத்து சாவகாசமாக வாயில் வெண்ணெயைப் போட்டுக் கொண்டான். மீண்டும் மணி ஒலிக்கத் தொடங்கியது. ஏன் சப்தம் எழுப்புகிறாய்? என்று மணியை கோபித்தான். அப்போது, ஹே! கிருஷ்ணா! சர்வலோக நாயகா! பகவானுக்கு நிவேதனம் ஆகும்போது ஒலி எழுப்புவது தானே என் பிறவிப்பயன். அதை செய்ய விடாமல் தடுக்கிறாயே! என்றது அடக்கத்துடன். கண்ணன் வெண்ணெய் திருடி உண்பதைத் தான் நிவேதனம் என்றது அந்த மணி. கண்ணன் வாயே திறக்கவில்லை.