சீதையைத் தேடிவந்த ராமலட்சுமணர் இருவரும் காட்டுப் பகுதியில் இருந்த சபரி ஆஸ்ரமத்தை அடைந்தனர். அங்கு மதங்க மகரிஷியின் சீடரான சபரி அன்னை தவம் செய்து கொண்டிருந்தாள். மதங்கரின் அறிவுரைப்படி ஒவ்வொருநாளும் ராமனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இரண்டு ஆண்டுகள் இப்படியே கழிந்தன. ஒருநாள், வில்லோடுவந்த ராமலட்சுமணரை கண்டாள். அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. காட்டில் தான் சேகரித்த பழங்கள், தேன், கிழங்கு ஆகியவற்றை கொடுத்து மகிழ்ந்தாள். அவளின் அன்பையும், பக்தியையும் கண்டு ராமலட்சுமணர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும்பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவி எடுத்த பயனைப் பெற்று விட்டேன். எனக்கு விடை கொடுங்கள். என்று வணங்கினாள். அவள் உடலில் இருந்து விடைபெற்ற உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் புறப்பட்டது.