பதிவு செய்த நாள்
20
ஜூலை
2013
10:07
உடுமலை: திருமூர்த்திமலையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட, பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை திருமூர்த்திமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், முதன்முறையாக ஆடிப்பெருக்கு விழா ஆக., 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. கண்காட்சி, நாட்டுப்புறக்கலைகள், அரசுத்துறை அரங்குகள், விளையாட்டுப்போட்டிகள் என இரண்டு நாட்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, வனத் துறை, இந்து அறநிலையத்துறை, உடுமலை ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சி, சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, படகுத்துறை அருகிலுள்ள இடம் சமன் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விழா நடக்கும் இரண்டு நாட்களும் திருமூர்த்தி அணையில் பரிசல் சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்படும். பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள் ளன. விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு இடங்களில் தகவல் பலகைகள் வைத்தல் ஆகிய பணிகளும் துவங்கியுள்ளன. காண்டூர் கால்வாய் பகுதியிலிருக்கும், ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மளிகைகளில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. ஐந்து அமைச்சர்கள் மற்றும் இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்ட இடத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீன்வளர்ச்சித்துறை சார்பில் கண்காட்சி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் விழாவிற்காக செய்யப்பட உள்ளன. ஆடிப்பெருக்கு திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட குழுவினர் திருமூர்த்திமலையில் முகாமிட்டுள்ளதால், விழாவிற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.