பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
தசரதர் என்ற மாமன்னரின் புத்திரனாய் அவதரித்தவர் ஸ்ரீராமன். அவர் பவுர்ணமி நிலா முகம் போன்ற முகமுடையவர். வில்வித்தையில் உலகிலேயே உயர்ந்தவர். பல ராட்சஷர்களை அழித்து வெற்றி வாகை சூடியவர். தந்தையின் ஒரு சொல்லுக்காக, தன் அன்பு மனைவி மற்றும் சகோதரனுடன் கானகம் சென்றவர். அவரது மனைவியை ராவணன் வஞ்சகமாக அபகரித்துச் சென்றான். ராமபிரான் அவளைக் காட்டில் தேடியலைந்த போது, சுக்ரீவன் என்ற வானர மன்னரின் நட்பைப் பெற்றார். நினைத்த ரூபத்தை எடுக்கக்கூடிய தனது வீரர்களிடம் சீதாதேவி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வர அவர் ஆணையிட்டார். அவள் இங்கே இருக்கிறாள் என்ற செய்தியை ஸம்பாதி என்ற கழுகு அரசனின் மூலமாக அறிந்து நூறு யோஜனை தூரமுள்ள இந்தக் கடலைத் தாண்டி இங்கே வந்தான். நான் செய்த பாக்கியத்தால் அவளைப் பார்த்தும் விட்டேன், என்றார் ஆஞ்சநேயர்.தன்னைப் பற்றியும், தன் பர்த்தா பற்றியும் யாரோ ஒருவர் மங்களகரமான வார்த்தைகளால் பேசுகிறாரே என்று சீதாதேவிக்கு ஆச்சரியம். அவள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தாள் தெரியுமா? திரிஜடையின் கனவு பயமுறுத்தலால் பயந்து போன அரக்கிகள் உறங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தாள். தற்கொலை செய்ய அவள் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன தெரியுமா? தன்னுடைய நீண்ட ஜடையை! ஜானகிதேவியான சீதைக்கு கருத்து சுருண்ட நீண்ட கூந்தல் இருந்தது. நீண்டநாளாக எண்ணெய் கூட தேய்க்காவிட்டாலும் கூட அதன் தேஜஸ் மட்டும் குறையவில்லை. அந்தக் கூந்தலை கழுத்தைச் சுற்றி இறுக்கி, தன்னை பலி கொடுக்க முடிவு செய்திருந்த நேரத்தில் இப்படி மதுரமான வார்த்தைகள் கேட்டு, யார் பேசுவது? எங்கிருந்து சத்தம் வருகிறது? என சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. மீண்டும் குரல் வந்த திசை நோக்கி பார்த்தபோது, ஏதோ ஒரு உருவம் தெரிந்தது. அது மிகுந்த பிரகாசமுடையதாகக் காணப்பட்டது. இப்போது பேசியவர் என் நாதனின் பெயரை உச்சரித்ததால், என் பிராணன் தப்பியது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்து அவரது குரலே என்னை மீட்டது என்று எண்ணிக்கொண்டாள் சீதா.
ஆஞ்சநேயர், வாயுவின் மைந்தனாக ஏன் பிறந்தார் தெரியுமா?காற்றிலுள்ள ஒரு வாயு தான் உலக உயிர்கள் பிராணனுடன் திகழ காரணமாக இருக்கிறது. அதனால் தான் அதை பிராணவாயு என்கிறார்கள். சீதாதேவி பிராணனை விட இருந்தாள். அந்த சமயத்தில் வாயுமைந்தன் அருகில் வந்தார். பிராணவாயு கிடைத்தால் எப்படி உயிர்கள் வாழுமோ, அதுபோல் வாயுவின் மைந்தன் மரணத்துக்கு தயாரான அவளை வாழ வைத்தான். சீதாவை வாழ வைத்ததால் ராமனை அவர் வாழ வைத்திருக்கிறார். ராமன் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. ஆக, சகல ஜீவராசிகளையும் அவர் பாதுகாத்திருக்கிறார். தெய்வம் உலக உயிர்களை வாழ வைக்கும். அந்த தெய்வத்தையே வாழ வைத்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் அவர் வாயுமைந்தனாகப் பிறந்தார். உயிரே போகுமளவுக்கு இடைஞ்சல் வந்தாலும், அதைப்போக்கி நம்மை வாழ வைப்பார் அந்த சிரஞ்சீவி!என் பர்த்தா இங்கே வரப்போகிறார் என நினைக்கிறேன். அதற்கு முன்னதாக நானிருக்கும் இடத்தை அறிய இவர் தூதுவனாக வந்திருக்கிறார் என மகிழ்ச்சி பொங்கப் பார்த்தாள். அதே நேரம் சந்தேகமும் அவளைப் பிடித்துக் கொண்டது.நிஜத்திலேயே இவன் ராமதூதன் தானா? ஒருவேளை மாயக்காரனோ? ஒருவேளை நான் கனவு காண்கிறேனோ? கனவில் குரங்கைக் கண்டால் நம் சொந்தங்களுக்கு தீங்கு வருமென்று சாஸ்திரம் சொல்கிறதே! என் தந்தைக்கோ, ராமலட்சுமணர்களுக்கோ கேடு வந்துவிடக் கூடாதே! ஆனால், நிச்சயமாக இது கனவல்ல. நிம்மதியில்லாதவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்? நான் தூங்கி தான் பலநாளாகிறதே. எனவே, நிச்சயம் இது கனவல்ல. ஒருவேளை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோமோ! கற்பனைக்கு உருவம் கிடையாது. ஆனால், இங்கே குரங்கு முகத்துடன் ஒருவன் அமர்ந்திருக்கிறானே! இவனது உருவஅமைப்பு, பேச்சு இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இவன் நமக்கு சகாயம் செய்யவே வந்திருக்கிறான். பிரகஸ்பதி, இந்திரன், பிரம்மா, அக்னி ஆகிய தெய்வங்கள் நான் நினைப்பதை உறுதியாக்கட்டும் என்று அவர்களைப் பிரார்த்தனை செய்தாள்.
இன்று குரு பெயர்ச்சி. ஆனானப்பட்ட சீதாதேவியே, பிரகஸ்பதியான குருவிடம் தனது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்திருக்கிறாள். சாதாரண ஜென்மங் களான நாம் எம்மாத்திரம்? இந்த இனியநாளில், இந்த அத்தியா யத்தைப் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது பெரும் பாக்கியம். நாம் ராசிபலன்களைப் படித்து மனம் குழம்பிப் போயிருப்போம். சீதாதேவி குருவிடம் வேண்டிக்கொண்டது போல, நாமும் நம் கஷ்டம் நீங்க அவரிடம் மனதார வேண்டிக்கொண்டால், கெடுபலன்களெல்லாம் தீர்ந்து போகும். ஆஞ்சநேயர் இப்போது மரத்தில் இருந்து கீழே இறங்கினார். சீதாவின் முன்னால் வந்து நின்றார். தலைமேல் கை கூப்பி, சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார். தாயே! தாமரைக் கண்களும் பிரகாசமான முகமும் கொண்ட தாங்கள் யார்? தாங்கள் சோகமே உருவாக கண்ணீர் வடிக்க காரணம் என்ன? நீங்கள் கிழிந்த ஆடையுடன் இருப்பது சற்றும் பொருத்தமாக இல்லையே! வசிஷ்டரைப் பிரிந்து சென்ற அருந்ததி போலவும், கணவரையோ, குழந்தைகளையோ, உடன்பிறந்தவர்களையோ இழந்து வருந்துபவர்களைப் போலவும் தெரிகிறதே! தங்கள் கதையை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றார். அவரது பணிவான வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்த சீதா, ராமருக்கு வாழ்க்கைப்பட்டது முதல் அன்று வரை நடந்த சகலத்தையும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தாள்.பொதுவாக பெண்கள் தங்கள் கணவரின் பெருமை பற்றி தம்பட்டம் அடிக்க வேண்டுமென்றால், சாப்பாடு, தூக்கம், துக்கம் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். தன் பர்த்தாவைப் பற்றி பேசுவார்கள்...பேசுவார்கள்.....பேசிக் கொண்டே இருப்பார்கள். இப்போது, நம் சீதாவுக்கு ஒரு ஆஞ்சநேயர் கிடைத்துவிட்டார். விடுவாளா அவள்...தன் நாயகனின் பெருமையை ஒரு இடத்தில் மிகமிக உச்சமாக வர்ணித்தாள். அது என்ன?