பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே வேட்டைக்காரன் கோவிலில் மழை வேண்டி, 16 கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்கள் வீடுகளில் இருந்த ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து, ஆற்றில் விடும் நூதன வழிபாடு நடத்தினர்.கோபி அருகே வேட்டைகாரன் கோவில், மொடச்சூர், வடுகபாளையம் உள்ளிட்ட, 16 கிராமங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த பகுதியில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களும் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் மழை வேண்டி, தங்கள் வீட்டில் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல்லுக்கு, மழைச்சோறு படைத்து நூதன வழிபாடு செய்த பிறகு, கல்லை ஆற்றில் விட்டால், மழை வரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.இங்குள்ள, 16 கிராமங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேட்டைக்காரன் கோவில் அருகே ஓரிடத்தில் ஒன்று கூடினர். தாங்கள் கொண்டு வந்திருந்த ஆட்டுக்கல், அம்மிக்கட்ல்லை ஐந்து டிராக்டரில் ஏற்றினர். சில கற்களை வைத்து மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன், படையல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடு ஒன்று பலியிடப்பட்டது. மணிக்கணிக்கில் பூஜை செய்த பிறகு, நஞ்சை புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றில் கல்கள் விடப்பட்டது.ஊர்பொது மக்கள் கூறியதாவது:மொடச்சூர் சுற்று வட்டாரத்தில் வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம் உள்ளிட்ட, 16 கிராமங்கள் எல்.பி.பி., பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி உள்ளது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே உள்ளனர். சென்ற இரண்டு ஆண்டாக ஏற்பட்ட வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டது. குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி ஆட்டுக்கல், அம்மி கல்லுக்கு பூஜை செய்து, மழைச்சோறு இறைவனுக்கு படைத்து, வழிபாடு செய்தோம். சிறப்பு பூஜை செய்த பிறகு கற்களை கொண்டு ஆற்றில் விடுவோம். நூதன வழிபாடு செய்தால் கண்டிப்பாக மழை வரும் என நம்பிக்கை உள்ளது, என்றனர்.