பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
ஸ்ரீபெரும்புதூர்: எடையார்பாக்கம் மகாதேவர் கோவிலில், 33லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கோவில்களின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோழ, பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. தமிழகத்தின் கட்டடக்கலையை பறைசாற்றும் இக்கோவில்களில் பல, சிதிலமடைந்து, புதர் மண்டி காட்சியளிக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்டது எடையார்பாக்கம் கிராமம். இங்குள்ள ஏரியின் மேற்கு பகுதியில், பழமை வாய்ந்த மகாதேவர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக் கோவிலை, சமீபத்தில், இந்து சமய அறநிலையத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த கல்வெட்டுகளில், இவ்வூர் இடையாற்றுப்பாக்கம் என்கிற இராஜவித்யாதர சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாகவும், முதலாம் குலோத்துங்கன் காலத்தில், கி.பி. 11ம் நூற்றாண்டில், தூங்காணை மாட வடிவில், இக்கோவில் கட்டப்பட்டதும் தெரிய வந்தது. இங்கு, திருப்பாதகாடுடையார் மகாதேவர் கருவறையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்துள்ளார். எனவே, வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதில், சுற்றுச்சுவர், கோவிலை சுற்றி பூங்கா, பக்தர்களின் வசதிக்காக, நடைபாதை உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.