பதிவு செய்த நாள்
23
ஜூலை
2013
10:07
திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் மற்றும் அதன் அருகே உள்ள சாலைகளை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளதால் மீட்டு, சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பக்தர்கள் வருகை திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் தாழக்கோவில், 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல்லவர், சோழர் மற்றும் விஜய நகர மன்னர்கள் காலங்களில் கட்டப்பட்ட இக்கோவிலில், நான்கு ராஜகோபுரங்களும், நுழைவு வாயிலில் ரிஷப கோபுரமும், கலைநயமிக்க சிற்பங்களுடன் கோவில் மற்றும் மண்டபங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலில், ஆண்டுதோறும், 11 நாள் தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில், பக்தர்களின் வசதிக்காக, நான்கு திசைகளிலும் அகலமான சாலைகளும், கோவிலைச் சுற்றி, பிரமாண்டமான சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், தற்போது, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களை, அங்குள்ள சிலர், ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டியுள்ளனர். ஏழு மற்றும் ஒன்பது நிலைகள் கொண்ட உயரமான கோபுரங்கள் அருகே, ஒரு அடி இடைவெளி கூட இல்லாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளனர்.
சிரமம்: இதனால், நான்கு திசைகளிலும் உள்ள சாலைகள் பெருமளவு குறுகி, திருவிழா மற்றும் உற்சவ காலங்களில், பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சுற்றுச்சுவரை பழமை மாறாமல் புதுப்பிக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.