பனிமயமாதா ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2013 10:07
தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.கொடியேற்ற விழாவினை முன்னிட்டு நகர வீதிகளில் இன்று கொடிப்பவனி நடக்கிறது.தூத்துக்குடிக்கு பனிமய அன்னையின் சொரூபம் 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தது. அதன் பிறகு 1582ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கல்லூரி கோவிலான புனித புவுல் சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டு பனிமய அன்னையின் திருவிழாவாக அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு புனித பனிமய அன்னை ஆலயம் நிறுவப்பட்டு 300 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தங்கத்தேர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவினை முன்னிட்டு நாளை காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதைத்தொடர்ந்து ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து 9 மணிக்கு திருப்பலி நடக்கிறது.மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பங்குதந்தை செல்வராஜ் அடிகளால் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து மாலை 5.30மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், இரவு செபமாலையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.கொடியேற்ற விழாவினை முன்னிட்டு இன்று மாலை 6மணிக்கு திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நடக்கிறது. நவநாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு செபமாலையும், 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு செபமாலையும், பிற்பகல் 3 மணிக்கு செபமாலையில் மறையுரை, அருளிக்க ஆசீர், இரவு 7.15 மணிக்கும், செபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் துணை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்துவருகின்றனர்.