பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
10:07
ஆடி 18 பண்டிகைக்கு, காவிரியில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வாய்ப்பு உள்ளதால், டெல்டா மாவட்ட மக்கள், மகிழ்ச்சியடைந்து உள்ளனர். ஆண்டுதோறும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12ல், நீர் திறக்கப்படும். பாசனத்துக்கு நீர் திறக்க, குறைந்தபட்சம் அணையின் நீர்மட்டம், 90 அடியும், நீர் இருப்பு, 52 டி.எம்.சி.,யும் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, நீர் குறைவாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு, தாமதமாக நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஆடி பெருக்கு பண்டிகைக்கு, வறண்டு கிடந்த காவிரியைக் கண்டு, கரையோர மக்கள் கலங்கினர். இந்த ஆண்டிலும், நீர்மட்டம் குறைவாக இருந்ததால், ஜூன், 12ம் தேதி, டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில், பருவமழையால், கர்நாடகா அணைகள் நிரம்பி உள்ளன. அவற்றில் திறக்கப்படும், உபரி நீர் தொடர்ச்சியாக வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 82.390 அடியாகவும், நீர் இருப்பு, 44.381 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது. நேற்று வினாடிக்கு, 19,075 கனஅடி நீர்வந்தது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து, 12 ஆயிரம் கனஅடியும், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, 10 ஆயிரம் கனஅடியும், உபரி நீர் திறக்கப்பட்டது. ஆடி பெருக்கு பண்டிகைக்கு, இன்னும், 10 நாட்கள் உள்ளன. அதற்குள், நீர் மட்டம், 90 அடிக்கு மேல் உயர வாய்ப்பு உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், ஆடி 18ம் பெருக்கு பண்டிகைக்கு, காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓட வாய்ப்பு உள்ளது. இது, டெல்டா மாவட்ட மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -