பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
10:07
உத்திரமேரூர்: ராவதநல்லூர் கிராமத்தின் ஏரிக்கரை அருகே, 1,000 ஆண்டுகள் பழைமையான, மகாவீரர் தீர்த்தங்கர் சிலை உள்ளதை, சமண ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, ராவதநல்லூர் கிராமம். இக்கிராமத்தில், 1.000 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் தீர்த்தங்கர் சிலை ஒன்று, ஏரிக்கரைக்கு அருகில், தொடக்க பள்ளி எதிரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாவீரர் தியானத்தில் அமர்ந்த நிலையில், அசோக மரத்தோடு உள்ள இச்சிலை, தலைக்கு மேல்புற முக்குடை உடைந்து காணப்படுகிறது. சிலையின் கீழ் பகுதியில் (லான்சனம்) சிங்க முத்திரை மூன்று உள்ளது. தியானம் மேற்கொள்ளும் மகாவீரரின் இருபுறமும், சாமரம் வீசுவோர் காணப்படுகின்றனர். இச்சிலையை சென்னையை சேர்ந்த ஜைன இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, சமண ஆய்வாளர் ஜீவக்குமார் கூறுகையில், ""இங்குள்ள மகாவீரர் சிலை,1,000 ஆண்டுகளுக்கு முன்னதானதாக இருக்கும் என, கருதுகிறோம். முந்தைய காலத்தில் சமண மக்கள், இப்பகுதியை சுற்றிலும் வாழ்ந்துள்ளனர். அதற்கு சான்றாகவே இச்சிலை இங்குள்ளது. இக்கிராம பொது மக்களின் ஆதரவுடன், சிலையை மண்டபம் அமைத்து பாதுகாக்க ஆலோசித்து வருகின்றோம், என்றார்.