பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
10:07
கோளூர்: பொன்னேரி:அமர்ந்த நிலையில் உள்ள அழகராய பெருமாள் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில், அழகராய பெருமாள் கோவில் உள்ளது. இது, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலமாகும். மற்ற கோவில்களில் பெருமாள் நின்ற நிலையில், காட்சி அளிக்கும் நிலையில், இங்கு அமர்ந்த நிலையில் வீற்றிருப்பது சிறப்பாகும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில்...: ஸ்ரீதேவி, பூதேவி சன்னிதிகளும், ஆழ்வார்கள் சன்னிதிகளுடன் இக்கோவில் அமைந்து உள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பழமை வாய்ந்த இந்த கோவில், உரிய பராமரிப்பு சிதிலமடைந்து கிடக்கிறது. கோவில் கட்டடங்கள் வர்ணம் மங்கி உள்ளது. மண்டபத்தின் தூண்கள் எப்போது விழுலாம் என, காத்திருக்கிறது. கோவில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளன. மேற்கண்ட பழமை வாய்ந்த திருத்தலத்தை, முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, சீரமைத்து தர வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டும் எனவும், பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கோளூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சீரமைப்பு குறித்து ஆய்வு செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.