பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
11:07
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயிலின் ஆரம்ப வடிவமைப்பினை இன்னும் 4 மாதங்களில் பக்தர்கள் நேரில் கண்டுகளிக்கலாம் என்று திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர். பிரசித்தி பெற்ற திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கும்பாபிஷேக திருப்பணிக்காக முழுமையாக அகற்றப்பட்டு, கலைநுட்பத்துடன் கூடிய புதிய கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அஸ்திவாரத்திற்காக குழிகள் தோண்டப்பட்டபோது ஐந்து அடி ஆழத்திலிருந்து அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. அனைத்து சன்னதிகளும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக ஒன்பது அடி ஆழம்வரை அஸ்திவார குழிகள் தோண்டப்பட்டு, அதில் நான்கு அடி உயரம் வரை ஆற்றுமணலும், ஒன்றரை அடியில் ஜல்லிகற்களும் கொட்டப்பட்டுள்ளன. இதற்காக, 180 லோடு ஆற்றுமணல் பல்வேறு பகுதிகளில் இருந்து இலவசமாக பெறப்பட்டுள்ளது. கோயில்களை பொறுத்தவரை அங்கு ஈஸ்வரர், அம்பாள் மட்டுமே ஸ்தாபிக்கப்பட்டிருப்பர். அனைத்து கோயில்களிலும் இதே விதிமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காளகத்தீஸ்வரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமி ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. வேறு எந்த கோயிலுக்கும் இதுபோன்ற சிறப்பு இல்லை என்பதால், புதிதாக கட்டப்படும் நான்கு சன்னதிகளையும் கலையம்சத்துடன் வடிவமைக்க திருப்பணிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியிலிருந்து ஒரே அளவிலான கருங்கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த கற்களில் சிற்பவேலைபாடுகளை செதுக்கும் பணியில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஸ்தபதி ரமேஷ் தலைமையில் 40 சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு பகுதியில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது. முழுமையாக அமைய இருக்கும் கோயிலின் ஆரம்ப வடிவமைப்பினை இன்னும் 4 மாதங்களில் பக்தர்கள் நேரில் கண்டுகளிக்கலாம் என்று திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர். கும்பாபிஷேக திருப்பணிக்காக பல்வேறு தரப்பினரும் நன்கொடைகளை நாள்தோறும் தாராளமாக மனமுவந்து அளித்து வருகின்றனர். இதுவரை, நன்கொடையின் மூலம் ரூ. 2 கோடி வசூலாகியுள்ளது. அஸ்திவார பணிக்காக ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள்ளது. முழுமையாக கோயிலை நிர்மானித்து முடிக்க ரூ. 20 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.