பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
11:07
நாமக்கல்: பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை வெட்டி சாய்த்த அர்ச்சகரை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், "சஸ்பெண்ட் செய்தனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூரில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி மதுகரவேணி அம்மாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழைமையான இக்கோவிலில், ஸ்தல விருட்சமாக வில்வ மரம் இருந்தது. இக்கோவில், இம்முடி ராமச்சந்திர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அப்பர் ஸ்வாமிகளால் வைப்புத்தலமாக வைத்து, தேவாரப்பாடல் பாடப்பட்டது. மேலும், வில்வகிரி ஷேத்திரம் என்றும் புராண காலத்தில் அழைக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகம் நூலில், இக்கோவில் வரலாறு இடம் பெற்றுள்ளது. கடந்த, 2009ம் ஆண்டு, கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, கோவில் வளாகத்தில் இருந்த, சிருங்கேரி மடத்தின் தனி தேவஸ்தானத்தை இடித்ததாக, அர்ச்சகர் உமாபதி மீது புகார் எழுந்தது.இந்நிலையில், கோவில் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் வெட்டி அகற்றியதாக, அர்ச்சகர் உமாபதி மீது புகார் கூறப்படுகிறது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஸ்தல விருட்சத்தை வெட்டியதை உறுதி செய்த அதிகாரிகள், அர்ச்சகர் உமாபதியை "சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலின் ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை, அர்ச்சகர் உமாபதி, தன்னிச்சையாக வெட்டி சாய்த்துள்ளார். இது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து, நேரில் விசாரணை நடத்தி, அவர், "சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.