பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைப்பவர். இன்னாருக்கு இன்னாரென எழுதி வைப்பவர். அதற்கு எல்லாரும் கட்டுப்பட்டே தீர வேண்டும். படைத்தவருக்குரிய மரியாதையை நாம் தரவேண்டாமா அதனால், அவருக்குரிய அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டார் ஆஞ்சநேயர். ஏற்கனவே, ஒரு சந்தர்ப்பத்தில் பிரம்மாவிடம் ஒரு வரத்தையும் வாங்கியிருந்தார் மாருதி.அதாவது, பிரம்மாஸ்திரத்துக்கு நீ கட்டுப்படும் காலம் வரும். அதனால் உனக்கு ஆபத்து எதுவும் நேராது. ஆனால், ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணிநேரம்) வரை நீ அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டும், என்பது தான். கடவுளை வணங்காதவனை விட வணங்குபவனுக்கு தான் அதிக சோதனை வரும். இது வாழ்க்கை நடைமுறை. அதாவது, நம் வினைகளின் பலனை இங்கேயே முடித்துவிட்டு, இறைவனின் லோகத்தை அடைந்ததும் சுகவாழ்வு அடைய வேண்டும் என்ற காரணமே இதற்கு இருக்க முடியும். இவ்வளவு நேரம் வெற்றிக்களியாட்டம் போட்ட மாருதி, இப்போது கஷ்டப்பட வேண்டிய நேரம் வந்தது. அவர் கட்டப்பட்டார்.ஆனால், ராட்சஷ முட்டாள்கள் என்ன செய்தனர் தெரியுமா அந்த அஸ்திரத்தின் ரகசியம் தெரியாமல், அவசரப்பட்டு அவரைக் கயிறுகளாலும், விழுதுகளாலும் கட்டிவிட்டனர். இப்படி பிற பொருட்களால் கட்டினால், அந்த அஸ்திரத்தின் கட்டு அவிழ்ந்து விடும். அது மட்டுமல்ல! அதை மீண்டும் எய்யவும் முடியாது. இந்திரஜித் இந்த அவசர செயலைக் கண்டு அதிர்ந்து விட்டான்.இனி இந்தக் குரங்கைப் பிடிப்பது கஷ்டமாயிற்றே! இது இப்போது கட்டுக்களை அவிழ்த்து இங்கே நிற்பவர்களை எல்லாம் வேட்டையாடி விடுமே! நமக்கும் அதோகதிதானோ என்று சிந்தித்த வேளையில், மாருதியோ கட்டில் இருந்து அவிழாதது போல நடித்தார்.இப்போது, இந்திரஜித்துக்கு இன்னும் குழப்பம்.
இந்தக் குரங்கு தன் கட்டுகள் அவிழாதது போல நாடகமாட வேண்டிய அவசியம் என்ன! அசுரர்கள் இது கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அடிக்கிறார்கள், குத்துகிறார்கள், ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அத்தனையையும் இது தாங்குகிறது என்றால், இது இன்னும் என்ன செய்யப்போகிறதோ!என்பதே குழப்பத்துக்கு காரணம்.மாருதி மிகுந்த பொறுமை காத்தார்.இவர்களை அடிப்பதை விட, இந்த கட்டிலேயே இருப்பதைப் போல் நடித்தால், நிச்சயம் இவர்கள் நம்மை ராவணனிடம் கொண்டு செல்வார்கள். அவனுடைய பராக்கிரமத்தை நாம் எடை போட்டு விடலாம். இது எதிர்வரும் போருக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணக்குப் போட்டார்.எதிரிகளின் பலம் தெரியாமல், அவர்களை எதிர்த்து யாரும் களத்தில் இறங்கக்கூடாது என்பது இதன்மூலம் தெரிய வரும் பாடம். அவர் நினைத்தது போலவே ராவணனின் முன்னால் அதைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். ராவணனை மிகவும் அருகில் பார்த்து மாருதி உண்மையிலேயே அதிசயித்தார். எப்படிப்பட்ட மகாபுருஷன் இவன்! இவன் மட்டும் தன் மனதை தர்மத்தின் வழியில் செலுத்தினால், இந்திரனையும், பிற தேவர்களையும் நிரந்தரமாக ஆளும் பாக்கியத்தைப் பெற்றிருப்பானே! என்று மனதுக்குள் பாராட்டினார். எதிரியை பாராட்டும் இந்த தன்மை மட்டும் அரசியலில் இருந்துவிட்டால், சண்டைகளுக்கு இடமில்லை. தேசமும் விருத்தியாகும் என்பது சுந்தரகாண்டம் இவ்விடத்தில் நமக்கு உணர்த்தும் கருத்து.இதே போன்ற யோசனை தான் ராவணனுக்கும் தோன்றியது.யார் இவன் ஒரு காலத்தில் நான் கைலாயத்தை அசைத்த போது எனக்கு சாபமிட்ட நந்தி பகவானா அல்லது யாரேனும் அசுரனா இப்போது, குரங்கு ரூபத்தில் வந்திருக்கிறானோ என்னுடைய அரண்மனைக்குள் தகுதியானவர்கள் மட்டுமே நுழைய முடியும். இவன் எப்படியோ இங்கே வந்துவிட்டான் என்றால் இவன் தகுதியுடையவர்களில் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்ற யோசனையுடன், தனது மந்திரி பிரஹஸ்தனிடம் கண்ஜாடை காட்டினான்.அவனது கருத்தைப் புரிந்து கொண்ட பிரஹஸ்தன், குரங்கே! எனது கேள்விகளுக்கு பயப்படாமல் பதில் சொல்.
உனக்கு நன்மை உண்டாகட்டும். உன்னை யார் இங்கே அனுப்பினார்கள் இந்திரனா வாயுவா விஷ்ணுவா குபேரனா எமனா பார்ப்பதற்கு குரங்கு போல் தோன்றினாலும், உன் சக்தியை மதிப்பிடும் போது அவ்வாறு நினைக்க எங்களால் முடியவில்லை. உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவோம். பொய் சொன்னால் உன் உயிர் போய் விடும். எதற்காக இலங்கைக்கு வந்தாய்? சொல், என்று கேட்டான்.மாருதி அவனைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யவில்லை. தைரியசாலியல்லவா அவர்! நேராக ராவணனை நேருக்கு நேர் பார்த்தார். அவனிடமே பதில் சொன்னார்.எந்த தேவரும் என்னை அனுப்பவில்லை. நான் வானரன் தான். ராட்சஷர்களின் மகாராஜாவான உன்னைப் பார்க்கவே இங்கு வந்தேன். உன் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே அசோகவனத்தை அழித்தேன். நீ அனுப்பிய ஆட்கள் என்னை துன்புறுத்தினார்கள். அவர்களிடம் இருந்து என் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர்களிடம் பலப்பரீட்சை செய்து கொன்றேன். எந்த அஸ்திரமும் என்னைக் கட்டுப்படுத்தாது என்ற வரத்தை நான் பிரம்மாவிடம் பெற்றுள்ளேன். ஆனாலும், ராட்சஷர்கள் என்னை உபத்திரவம் செய்ததையும் பொறுத்துக் கொண்டு, பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் நடித்ததன் காரணம், உன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். நான் சொல்லும் நல்வார்த்தைகளைக் கேள், என்று ஆரம்பித்தார்.கிஷ்கிந்தையின் அரசன் சுக்ரீவன் என்னை இங்கே அனுப்பினார். தசரத புத்திரரான ராமனின் மனைவி சீதையை நீ கடத்தி வந்துள்ளாய். ராமபிரானும், சுக்ரீவனும் இப்போது நண்பர்கள். ராமனின் மனைவியை மீட்டுத்தருவதாக சுக்ரீவனும், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று வானர ராஜ்யத்திற்கு சுக்ரீவனை அதிபதியாக்குவதாக ராமனும் உடன்பாடு செய்து கொண்டனர். ராமன் தான் சொன்னதை நிறைவேற்றி விட்டார். சுக்ரீவன் தன் பங்கை நிறைவேற்றும் நடவடிக்கை எடுத்துள்ளார். நீயாகவே, சீதையைக் கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டால் உன் பத்து தலைகளும் பிழைக்கும். இங்கிருக்கும் சீதாபிராட்டி சாதாரணமானவள் அல்ல. அவள் இலங்கையை அழிக்க வந்திருக்கும் காளராத்ரி என்ற சக்தி. கவனம், என்றவர் மேலும் தொடர்ந்தார்.