பதிவு செய்த நாள்
25
ஜூலை
2013
11:07
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் முப்பெரும் விழா நடந்தது.கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் திருவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் 101வது ஆண்டு நாடக விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழா கடந்த 15ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. விழாவிற்கு ஊர் அம்பலம் துரைபாண்டி தலைமை வகித்தார். சிவந்திபட்டி நாடார் உறவின் முறைச்சங்க தலைவர் ஆதிராஜன், கோவில்பட்டி தலைவர் அய்யாத்துரை, கோட்டையம் விஜயகுமார், நெல்லை ராமச்சந்திரன், விவேகானந்தன், ஜெயபால், சந்திரன், சென்னை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி வாழ் சிவந்திபட்டி நாடார் உறவின்முறைச் சங்க முத்துகணேசன் வரவேற்றார். கோவில்பட்டி அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி விஜயன் விழாவை துவக்கி வைத்து பேசினார். அம்மன் வீதியுலா, முளைப்பாரி ஊர்வலம், கரகாட்டம், பக்தி சொற்பொழிவு, நாடகம், வள்ளி திருமணம், அரிச்சந்திரன் நாடகம், விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலும் சென்டை மேளத்துடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காமராஜர் திருவுருவப்பட வீதியுலா நடந்தது. விழா நாட்களான மூன்று நாட்களும் ஊர்பொதுவிருந்து நடந்தது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி டிஎஸ்பி ராஜேந்திரன் பரிசு வழங்கினார். ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா நன்றி கூறினார். முருகேசபாண்டியன், சேர்மராஜன், பூவனைந்தபெருமாள், பொன்னுத்துரை, ஆறுமுகச்சாமி, தருமர், அருணாசலபாண்டி, முத்துக்குமார் உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.