Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » அண்ணாமலைக் கவிராயர்
சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
15:32

கந்தன்உறை கழுகுமலைக் கண்டதனால் மறையவராய்
முந்தைவினை நீக்கியதும் முருகனது புகழ்பாடும்
சிந்தையுடன் புலமை பெற்றுச் சித்தன்மேல் காவடிக்காம்
சிந்துபாடு அண்ணாமலைச் சிந்தையுறு பதம் போற்றி

கழுகுமலைக் கந்தனுக்கு அரோஹரா! குன்றிலாடும் குமரனுக்கு அரோஹரா! செந்தலாண்டவனுக்கு அரோஹரா! விண் அதிர ஆர்ப்பரித்தார்கள் முருகனடியார்கள்.

வருகிற கிருத்திகை அன்று நான் கழுகுமலைக் கந்தனுக்கு பால்காவடி எடுக்கப் போகிறேன். அப்போது என் அருகில் இருந்து கந்தன் புகழை சிந்துகவியால் பாட வேண்டும் என்று அண்ணாமலைக் கவிராயரிடம் வேண்டுகோள் விடுத்தார் ஊற்றுமலை ஜமீன்தாரான இருதாலய மருதப்பதேவர். முருக பக்தியில் முதிர்ந்த அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கவிராயர். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? என் பிறவி ஈடேறவே இப்படி ஒரு வாய்ப்பு தங்களால் எனக்கு கிடைத்தது என்று பதிலுக்கு நெருக்குருகிச் சொன்னார்.

காவடி தினத்தன்று அடியார்கள் புடைசூழ அரோஹரா ஒலிவானை அளாவியது. பக்தர் ஜனப் பெருக்கமும், ஹரஹர ஒலியும் கவிராயரின் உள்ளத்தை பாகாய் உருக்கி, அற்புதப் பாடல் ஒன்றை பிறக்கச் செய்தது.

அருணகிரி நாவிற் பழக்கம்- தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம்-பல
அடியார்கணம் மொழி போதினில்
அமராவதி இமைபோர் செவி
அடைக்கும் அண்டம் உடைக்கும்!

அண்ணாமலை கவிராயரின் இந்தச் சந்தப்பாடலில் லயித்து மெய்ம்மறந்து ஆடினார்கள் பக்தர்கள். பரவசத்தோடு கழுகுமலை புறப்பட்டார்கள். காவடி தாங்கிவந்த ஜமீன்தாரின் மனமும், பக்தித் தேனைக் குடித்து பரவசமாயிற்று.

அந்தநேரம் திடீரென்று முருகா! கந்தா! என்று கூறிமூர்ச்சையாகி வீழ்ந்தார் அண்ணாமலைக் கவிராயர். அவர் முகத்தில் பன்னீர் தெளித்து எழச் செய்த ஜமீன்தார்ல சட்டென்று ஆலிங்கனம் செய்துகொண்டார். சிந்து பாடிய அந்தச் செல்வரைப் பாராட்டி கவுரவித்தார்.

காவடிச் சிந்து என்னும் அழகான. அற்புதமான சந்த ஓசை நிறைந்த கவிதைகளை முருகப்பெருமானுக்குச் சூட்டிய இந்த சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோமா? சங்கரநாராயணர் கோயில் என்ற தலத்துக்கு அருகில் உள்ளது கரிவலம்வந்த நல்லுர். அதனருகில் உள்ள சிற்றூர்தான் சென்னிகுளம் அங்கு வாழ்ந்த சென்னவ ரெட்டியார் ஓவு அம்மாள் தம்பதிக்கு 1861 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாமலை இவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள். திண்ணைப் பள்ளியில் பயின்ற அண்ணாமலையின் நாவில் அழகுத் தமிழ் நடனமிட்டது.

இளமையில் பெற்றோர் சொல்கேளாமல் பள்ளியில் தம்முடன் பயின்ற சிறுவர்களுடன் ஊர் சுற்றித் திரிவார் அண்ணாமலை. கரிவலம்வந்தநல்லு<õர் அருகில் <உள்ள நிட்சேப நதிக்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவார். கிழக்கே உள்ள குன்றின் மேலேறி இயற்கையை ரசிப்பார். அங்கே உள்ள ஆலயத்தை வலம் வருவார். குறிக்கோள் எதுவும் இல்லாமல் சித்தம் போக்கு சிவம் போக்கு என்பது போல மனம் ஒரு நிலையில் இல்லாது தவிப்பார்.

பெற்றோர் இவரைக் கண்டித்தனர். ஊர் சுற்றினால் குடும்பம் உருப்படாது; வேலையைத் தேடும் வழியைப் பார்! என்றனர். வேலை தேடித்தான் திரிகிறேன். இப்போது அதுதான் என் வேலை என்று அவரது வாய் முணுமுணுத்தது.

பெற்றோரின் கண்டிப்பால் மனத்தில் ஒருவித விரக்தியுடன் காணப்பட்டார் அண்ணாமலை. ஒருநாள், எங்கு செல்கிறோம் என்ற எண்ணமில்லாமல் வெகு தூரம் நடந்து, கழுகாசலம் என்னும் கழுகுமலையை அடைந்தார். மலை அடிவாரத்தில் உள்ள கந்தன் ஆலயம் சென்றார். ஒரு முகம், 6 கரங்களுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கோடியழகு கொட்டிக்கிடக்க காட்சி தந்த கந்தனை கண்டு மெய்ம்மறந்தார்.

வேண்டும் அடியர், புலவர் வேண்ட... அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமானே! என்று சந்தக் கடல் அருணகிரிநாதர் பாடியுள்ளாரே! அப்படிப்பட்ட கந்தன் இந்த அண்ணாமலைக்கு எந்தப் பொருளை தரப் போகிறானோ?

அன்று முழுவதும் உணவு எதுவும் உட்கொள்ளாததாலும், உடல் களைப்படைந்ததாலு<ம் ஆலயத்தின் ஒருபுறத்தே அசந்து கண் துயின்றார் அண்ணாமலை. இவர் கோயிலுக்குள் படுத்திருப்பதை யாரும் கவனிக்கவில்லை இரவு பூஜையை முடிந்ததும் கோயில் அர்ச்சகர் கதவை வெளிப்புறம் தாளிட்டுச் சென்றார்.

நள்ளிரவில் அண்ணாமலைக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. கண் விழித்தார். கோயில் கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். பசியாலும் மனவேதனையாலும் அழுதார். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கந்தன்பெருமான் அங்கே தோன்றினார். அண்ணாமலையை நோக்கி, குழந்தாய் வருந்தாதே! உனக்கு என்ன வேண்டும்? என்றார் பரிவோடு!

பசிக்கு உணவு வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார் அண்ணாமலை.

அவ்வளவுதானே என்று சொன்ன கந்தப் பரம்பொருள் அவர் விரும்பிய படி பால், பழம், உணவு முதலியன கொடுத்து வயிற்றுப் பசியாற்றினார். அடுத்து அறிவுப் பசியைத் தீர்த்தார். ஆறுமுகப் பரமனது அருட்காட்சியால் அண்ணாமலைக்குக் கவியாற்றல் பெருகியது. தெய்வத் திருப்புகழைப் பாராயணம் செய்தார். கந்தரனுபூதியில் திளைத்தார். சதக நூல்கள். வெண்பா. திருக்குறள் நாலடியார் இப்படிப் பல நூல்களை எளிதில் கற்றார்.

அண்ணாமலையின் சிற்றப்பா ராமசாமிக் கவிராயர் யாப்பிலக்கணத்தில் புலி. சேற்றூர் சமஸ்தான வித்வானான அவர் ஒருநாள் சென்னி குளம் வந்தார். அப்போது,

வள்ளிமயில் அழகை
புள்ளிமயில் மேலிருந்து
அள்ளிப் அள்ளிப் பருகும் அம்மான்
தெய்வப் பெம்மான்

என்று, அண்ணாமலை தம்மை மறந்து சந்த ஓசையுடன் பாடியது காற்றில் மிதந்து வந்ததைக்கேட்டு சிலிர்த்துப் போனார்.

அந்த நாட்களில் சேற்றூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் என்பவர் விருத்தப் பாக்களை விரைந்து பாடும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருக்கும் அண்ணாமலைக்கும் நட்பு ஏற்பட்டது. கவிராயர், அண்ணாமலையை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்றார். மடாதிபதி ஸ்ரீமத் சுப்ரமண்ய தேசிகரிடம் அவரை அறிமுகப்படுத்தினார். உவே. சாமிநாதய்யரிடம் தமிழ் பயில அண்ணாமலைக்கு வழிவகை செய்து தந்தார் தேசிகர். ஐயரவர்களிடம் நன்னூல், மாயூரப் புராணம் முதலான நூல்களைக் கற்றார். இதனால் , அண்ணாமலையாருக்கு செய்யுள் இயற்றும் ஆற்றலும் மிகுந்தது. யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புகளோடு செய்யுள் இயற்றும் திறமை அண்ணாமலைக்கு வெகு விரைவில் வந்தது என்று உ.வே சாமிநாதய்யரே தமது வரலாற்றில் குறிப்பிடுகிறார்.

இவரது கவித்திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீன முதல்வர் தேசிகர், நீ குலத்திலும் ரெட்டி, அறிவிலும் இரெட்டி என்று பாராட்டினாராம்.

குன்னூர் ராமசாமி முதலியார் என்பவர் அண்ணாமலையின் கவிகளில் அதிகம் ஈடுபாடு காட்டினார். ராமநாதபுரம் திருநெல்வேலி, மதுரை முதலான ஊர்களில் அண்ணாமலையாரின் பாடல்களை பாடி, அவருக்குப் பெருமை சேர்த்தார்.

இதற்கிடையில், திருவாவடுதுறையில் இருந்து சென்னிகுளம் திரும்பிய அண்ணாமலையார், யாப்பு அமைதியும் சந்தச்சுவையும் கொண்ட பாடல்கள் பலவற்றை இயற்றினார். அப்போதுதான் முன்புசொன்ன ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவர், அண்ணாமலையாரின் வாக்கு நயத்தில் வியந்து, அவரைத் தம் சமஸ்தான புலவர் ஆக்கினார்.

வீரை என்ற தலத்தில் இறைவன் மீது வீரை அந்தாதி, பிள்ளைத்தமிழ் இரண்டையும் பாடினார் அண்ணாமலைக் கவிராயர். சங்கர நாராயணர் கோயில் திரிபு அந்தாதி, நவநீத கிருஷ்ணன் பிள்ளைத்தமிழ் மற்றும் ஊற்றுமலைத் தனிப்பாடல் திரட்டு முதலியனவும் இவரால் இயற்றப் பெற்றவை.

இவர் பாடியுள்ள காவடிச் சிந்து 24 பாடல்களைக் கொண்டது. இதில் 3 பாடல்கள் செந்தில் கந்தனைக் குறிப்பது. கழுகுமலை வளம், நகர் வளம், கோயில் வளம், வாவிவளம், சோலை வளம் மற்றும் அகப்பொருள் துறைகளோடு அமைந்துள்ளது அண்ணாமலையாரின் காவடிச் சிந்து.

பொதுவாக, காவடிச்சிந்து என்றாலே சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பெயர்தான் முதலில் வந்து நிற்கும். அப்படிப்பட்டவர் இவ்வுலகில் புகழுடன் வாழ்ந்து, 1891-ஆம் ஆண்டு தை அமாவாசையன்று முருகன் திருவடிகளில் கலந்தார். சென்னிகுளத்தில் சிந்துக்கவி பேரரக அண்ணாமலைக் கவிராயர் மணிமண்டபம், சமாதி ஆகியவை அமைந்துள்ளன.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.