ஆடி மாத விஷேசம் தேவிபட்டணம் தட்டாங்குளத்து காளியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2013 10:07
தேவிபட்டணம்: தேவிபட்டணம் தட்டாங்குளத்து காளியம்மன் கோயிலில் ஆடிமாதம் முழுவதும் விசேஷமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் இக்கோயிலுக்கு வந்து அம்மனுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து பட்டு உடுத்தி குங்குமத்தால் அர்ச்சனைசெய்து வழிபட்டால் சகல நலனும் பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம். திருமண தடையுள்ளவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்துவதுடன் அவர்களின் வயதிற்கு தக்கபடி (21 வயது எனில் 21) விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். குங்குமம் அர்ச்சனை செய்தும் இங்குள்ள மரத்தில் தாலிக்கயிறு கட்டியும் வழிபட்டால் திருமண தடை நீங்கும். அம்மனுக்கு புடவை சார்த்தி அர்ச்சனை செய்து, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் தீராத நோயும் தீரும், திருமண தடை விலகும், இங்கு தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் பிள்ளை வரமும் நெருங்கிவரும் என்று நம்பி ஏராளமானோர் வருகை தந்து தங்களது நேர்ச்சைகளை செலுத்துகின்றனர். நோய்நொடியின்றி வாழவேண்டும் என்றும், வாதம் முதலான நோய்களில் இருந்து விடுபடவேண்டும் என பிரார்த்தனை செய்பவர்கள் மரபொம்மை செய்து வைத்து வழிபட்டு செல்கின்றனர். உயரமான காளியாகவும், சாந்த முகத்துடன் விளங்குவதால் சக்தி வாய்ந்தவளாக கருதப்படுகிறாள். குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் நோயினால் பிடிக்கப்பட்டவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டு குறைநீங்கி நலமடைகின்றனர். அம்மனின் உடம்பில் வேண்டுதலுக்கு மஞ்சள் கயிறும், எலுமிச்சை பழங்களும் ஏராளமாக இருக்கும். கோயிலில் எப்போதும் நெய்விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜையும், பவுர்ணமி அன்று பவுர்ணமி வழிபாட்டு குழுவினரால் பூஜையும் நடக்கிறது.